கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கியும் ஓபிசி மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை: எம்.பி.க்களுக்கு 10 இடம் ஒதுக்குவதால் கண்டுகொள்ளாத கட்சிகள்

by Web Team
0 comment

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியும், மாணவர்களால் பயன்பெற முடியவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை மண்டலத்தில் 49 பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் 1,240 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவற்றில் 11 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் ஏற்கெனவே எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு இருந்த நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் ஓபிசி பிரிவில் ஒருமாணவர்கூட தேர்வு செய்யப்படவில்லை. ஓபிசி பிரிவில் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள், பெற்றோர் கூறியதாவது:

ஒரு வகுப்பில் 40 இடங்கள் இருந்தால், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 10 இடங்கள் (25%), எஸ்சி 6 இடங்கள் (15%), எஸ்டி 3 இடங்கள் (7.5%), ஓபிசி 11 இடங்கள் (27%) என 30 இடங்கள் நிரப்பப்படும் எஞ்சியுள்ள 10 இடங்கள் பொதுப் பிரிவில் நிரப்பப்படும்.

முதலில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்கள் நிரப்பப்படும். பின்னர் பணியாளர்களுக்கான (பொது) பிரிவில், கடந்த 7 ஆண்டுகளில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கைஅடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்களது பிள்ளைகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த ஆண்டு 1-ம் வகுப்புக்குதேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியல் கடந்த 11-ம்தேதி வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுகளுக்கான பட்டியலில் எல்லா மாணவர்களும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பொதுப் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும், இடஒதுக்கீட்டில் கணக்கு காட்டப்பட்டுள்ளனர்.

இடஒதுக்கீட்டு முறையின்படி, பொதுப் பிரிவு தனியாக, இடஒதுக்கீட்டு பிரிவு தனியாக கணக்கிட வேண்டும். ஆனால்பொதுப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஓபிசி பிரிவினர், ஓபிசி இடஒதுக்கீட்டில் கணக்கு காட்டப்படுகின்றனர். இவ்வாறுதான் எஸ்சி, எஸ்டி பிரிவிலும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஓபிசி இடஒதுக்கீடு வழங்கியும், ஓபிசி மாணவர்களால் பயன்பெற முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து சென்னையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஒருவர் கூறியபோது, ‘‘ஒரு வகுப்பில் ஓபிசி பிரிவில் 11 மாணவர்களை சேர்க்க வேண்டும். ஏற்கெனவே கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்ட 10 மாணவர்களில் 2 பேர் ஓபிசியாக இருந்தால், 11-ல் 2 பேர் கழிக்கப்படுவார்கள். எஞ்சியுள்ள 9 இடங்களில், பணியாளர்களுக்கான பிரிவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் 9 பேர் ஓபிசி பிரிவினராக இருந்தால், அது அந்த 9 ஓபிசி இடங்களில் கழிக்கப்படும். இவ்வாறு செய்ததால், ஓபிசி பட்டியலில் மாணவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றிதான் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் சிலர் கூறும்போது, ‘‘கேந்திரிய வித்யாலயா சங்கதன் விதிகளால், பின்தங்கிய மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. எம்.பி.க்களின் பரிந்துரைஅடிப்படையில் இப்பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காததற்கு இதுவும் முக்கிய காரணம்’’ என்றனர்.

Related Posts

Leave a Comment