ஆவணி பிரதோஷம்… ராகுகாலம்… சிவ வழிபாடு

by Web Team
0 comment

ஆவணி பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்யுங்கள். ராகுகாலமும் இணைந்திருப்பதால், மாலையில் விளக்கேற்றுங்கள். மங்கல காரியங்களை தடையின்றி நடத்தித் தந்தருள்வார் சிவபெருமான்.

சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்தது பிரதோஷ தினம். அதேபோல், சிவனாருக்கு திங்கட்கிழமை ரொம்பவே விசேஷம். சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் பிரதோஷம் வந்தால், அன்றைய தினத்தில் சிவ வழிபாடு செய்தால், ஞானமும் யோகமும் கிடைக்கும். முக்தி நிச்சயம் என்பார்கள்.

செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தில் சிவ பூஜையோ சிவ தரிசனமோ செய்தால், இல்லத்தில் நிம்மதியும் அமைதியும் உண்டாகும். புதன்கிழமை பிரதோஷத்தின் போது சிவ பூஜை செய்தாலோ சிவ தரிசனம் செய்தாலோ, புத்தியில் தெளிவு உண்டாகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

வியாழக்கிழமை பிரதோஷம், குருவரும் திருவருளும் தந்தருளும். வீட்டில் சுப நிகழ்வுகள் அரங்கேறும். வெள்ளிக்கிழமையன்று பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டாலோ சிவ பூஜை செய்தாலோ, மாங்கல்ய பலம் பெருகும். வீட்டில் ஐஸ்வர்யம் நிலைக்கும். சனிக்கிழமையன்று பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டால், சகல பாவங்களும் நீங்கும்.

ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தின் போது சிவ பூஜை செய்தால், வாக்கு வன்மை ஏற்படும். கடன் தொல்லையில் இருந்து மீள்வோம். கல்யாண தோஷங்கள் நீங்கும். ஆரோக்கியத்துடன் வாழலாம்.

ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம். இந்த வேளைதான் பிரதோஷ காலம். எனவே, ராகுகாலமும் பிரதோஷமும் இணைந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது.

இன்று 30.8.2020 பிரதோஷம். ஆவணி பிரதோஷம். ஞாயிறுப் பிரதோஷம். இந்தநாளில், பிரதோஷ அபிஷேகத்துக்கு பால், தயிர், தேன், திரவியப் பொடி, சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளை வழங்குங்கள். வீட்டில் மாலையில் ராகுகாலவேளையில் விளக்கேற்றுங்கள். சிவனாரின் படத்துக்கு மாலையிடுங்கள். ருத்ரம் பாராயணம் செய்யலாம். நமசிவாயம் சொல்லிக்கொண்டிருக்கலாம்.

இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தும் விலகும். இல்லத்தில் ஒற்றுமை மேம்படும். கடன் முதலான பிரச்சினைகளில் இருந்து மீளலாம். கவலைகள் அனைத்தையும் பறந்தோடச் செய்வார் தென்னாடுடைய சிவனார்.

Related Posts

Leave a Comment