நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் குறைந்த செலவில் தண்ணீர் மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று ஜான்சிராணி லட்சுமிபாய் மத்திய பல்கலைக்கழகக் கட்டிடத் திறப்பு விழாவில், மாணவர்களிடையே பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் ஜான்சிராணி லட்சுமிபாய் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு விவசாயம், தோட்டக்கலை மற்றும் வனவியல் படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகள் 2014-15 ஆம் கல்வியாண்டில் இருந்து கற்பிக்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களுக்கான கட்டிடங்கள் இன்னும் முழுமையாகத் தயாராகாததால் வேறோர் இடத்தில் வகுப்புகள் இயங்கி வந்தன. இந்நிலையில் லட்சுமிபாய் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டிடங்களைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
அதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களிடையே அவர் கலந்துரையாடினார். சமையல் எண்ணைய் இறக்குமதியைக் குறைப்பதில் உள்ள சவால்கள், உணவு பதப்படுத்துதலை அதிகரித்தல் குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பதப்படுத்தலில் உள்ள சிரமங்களை எப்படி எதிர்கொள்வது என்று மாணவர்களிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
மைக்ரோ, சொட்டு மற்றும் தெளிப்பான் நீர்ப்பாசனம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமா என்று மாணவர்களிடம் கேட்ட பிரதமர் மோடி, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் குறைந்த செலவில் தண்ணீர் மறுசுழற்சி மற்றும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ”வறட்சி மிகுந்த பந்தேல்கண்ட் பகுதியில் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை அமைப்பது விவசாயிகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும்” என்றார்.