அதிபர் தேர்தலில் போட்டியிட இவாங்கா தகுதியானவர்- மகள் குறித்து டிரம்ப் கருத்து

by Web Team
0 comment

கமலாஹாரீசை விட 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட இவாங்கா தகுதியானவர் என்று மகள் குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி நடக்கிறது.

இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் களம் இறங்கி உள்ளார்.

அதேபோல் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். இவரது தாய் சியாமளா சென்னையில் பிறந்தவர். தந்தை டெனால்டு ஹாரீஸ் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்.

அமெரிக்க தேர்தலில் தற்போது பிரசாரம் சூடு பிடித்துள்ளது. டிரம்ப் மீது ஜோபிடன், கமலா ஹாரீஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதே போல் டிரம்பும் ஜோபிடன், கமலாஹாரீஸ் மீது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

இதற்கிடையே 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் கமலா ஹாரீஸ் திறமையில்லாதவர். அவரை விட அதிபர் தேர்தலில் போட்டியிட தனது மகள் இவாங்கா தகுதியானவர் என்று கூறியுள்ளார்.

நியூஹாம்ஸ்பியரில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் அதிபராக இதுவரை ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. அமெரிக்க அதிபராக ஒரு பெண் வருவதை நான் விரும்புகிறேன். ஆனால் அது கமலாஹாரீஸ் அல்ல. அவருக்கு அதற்கான தகுதி கிடையாது.

அவரது கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் அவரும் களம் குதிக்கிறார். ஆனால் அவரது செல்வாக்கு குறைந்து இருந்தது.

ஒருசில மாகாணங்களில் நடந்த முதன்மை தேர்தலிலேயே அவரது ஆதரவு ஒன்றை இலக்கத்துக்கு சென்று விட்டது. அவர் அழகாக இருக்கிறார். வெறும் அழகு மட்டுமே இருந்தால் அதிபராக முடியுமா?

2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் கமலாஹாரீசை விட என் மகள் இவாங்கா டிரம்ப் போட்டியிட தகுதியானவர். இவாங்கா அதிபராக வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். அவர்களை குறை சொல்ல மாட்டேன். இவாங்கா சிறந்த வேட்பாளராக இருப்பார்.

கமலாஹாரீசுக்கு மக்கள் ஆதரவு இல்லை. ஜமைக்காவைச் சேர்ந்த அப்பாவுக்கும், இந்திய தாய்க்கும் பிறந்த கமலா ஹாரீஸ் அமெரிக்க தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய மற்றும் கறுப்பின பெண்ணாக உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவாங்கா அதிபர் டிரம்பின் ஆலோசகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப்- ஜோபிடனுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கருத்து கணிப்புகளில் ஜோபிடன் முன்னிலை வகிக்கிறார். இதனால் டிரம்ப் ஜோபிடன்-கமலாஹாரீசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

Related Posts

Leave a Comment