கேரளாவில் ஓணம் பண்டிகை அன்று பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள். அதில் ஒலன் என்ற ரெசிபியும் ஒன்று. இன்று இந்த உணவு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணி – 200 கிராம்
சிவப்பு பயிறு (சிவப்பு காராமணி அல்லது பெரும்பயிறு) – அரை கப்
பச்சை மிளகாய் – 5
தேங்காய் – அரை மூடி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை :
முதலில் வெள்ளை பூசணியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சிவப்பு பயிறை குக்கரில் வேக வைத்து எடுத்து வைக்கவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து பிழிந்து முதல் மற்றும் இரண்டாம் பால் எடுக்கவும்.
வாணலியில் பூசணித் துண்டுகள், பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, இரண்டாம் தேங்காய் பால் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும்.
காய் வெந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பயிறை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கரண்டியால் காய் மற்றும் பயிறை லேசாக மசித்து விடவும்.
பிறகு முதல் தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டில் சேர்க்கவும்.
சுவையான ஓலன் தயார்