ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து ஷின்சோ அபே ராஜினாமா

by Web Team
0 comment

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் பிரதமராக நீண்டகாலம் பதவி வகித்தவர் ஷின்சோ அபே. 65 வயது நிரம்பிய அபே லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியை சேர்ந்தவர். 2006 முதல் 2007 வரை பிரதமர் பதவி வகித்த பின் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் 2012 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அபே 2012 முதல் தற்போதுவரை ஜப்பானின் பிரதமர் பதவியை வகித்து வந்தார். இவரின் பதவி காலம் நிறைவடைய இன்னும் 1 ஆண்டு உள்ளது.

இதற்கிடையில் ஷின்சோ அபேக்கு பல ஆண்டுகளாக பெருங்குடல் புண் நோய் உள்ளது. இந்த உடல்நல பிரச்சனைக்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாகவும், உடல்நலம் மோசமடைந்து வருவதாலும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஷின்சோ அபே இன்று அறிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஜப்பான் மக்களிடம் பேசிய அபே தனது ராஜினாமா முடிவை அறிவித்தார்.

இவரது ராஜினாமா உலக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஷின்சோ அபேயின் ராஜினாமாவை தொடர்ந்து அவரது பதவிக்கு அடுத்த நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி திவீரமாக ஈடுபட்டு வருகிறது.

புதிய பிரதமர் தேர்ந்தெடுக்க சில நாட்கள் கால அவகாசம் தேவைப்படுவதால் அதுவரை ஷின்சோ அபேயே ஜப்பானின் பிரதமராக தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து ஷின்சோ அபே ராஜினாமா செய்திருக்கும் நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் அபேவின் உடல்நிலை விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment