குருவுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. வியாழக்கிழமையை, குருவாரம் என்றே போற்றுவார்கள். குருவுக்கு உகந்த வியாழக்கிழமையில், குரு மகான் ஸ்ரீராகவேந்திரரை மனதார வழிபடுங்கள். நம் கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பார் பூஜ்ய ஸ்ரீ ராகவேந்திரர்.
குருவருள் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக அவசியம். ஒவ்வொருவருக்கும் குருநாதர் என்பவர் வாழ்வை உயர்த்தவும் வாழ்க்கைக்கு வழிகாட்டவும் மிக மிக அவசியம். குரு என்பவரும் மகான் என்பவரும் ஒருவரே. மகான் என்பவரும் ஞானி என்பவரும் ஒருவரே.
இந்த உலகில் எத்தனையோ மகான்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நமஸ்காரம் என்கிறது ஒரு கீர்த்தனை. மகான்கள் எல்லோருமே நம்மை ஆசீர்வதிக்கவும் அருள்வதற்காகவுமே நம் மண்ணில் நடமாடியிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்… பூஜ்ய ஸ்ரீ ராகவேந்திரர்.
ராகவேந்திரர், இந்த மண்ணுலகை உய்விக்க வந்த அற்புத மகான். பல அற்புதங்களால் நமக்கு பல விஷயங்களை வாழ்வியல் தத்துவங்களை உணர்த்தி வியக்கச் செய்த சித்தபுருஷர்.
ஸ்ரீராகவேந்திரரை மனதால் நினைத்தாலே போதும்… நம்மையும் நம் சந்ததியும் செழிக்கச் செய்து அருளுவார்.
ஸ்ரீராகவேந்திரர் காயத்ரி
ஓம் பிரகலநாதாய வித்மஹே
வியாசராஜாய தீமஹி
தந்நோ ஸ்ரீராகவேந்திர ப்ரசோதயாத்
ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அருளிய பிரகலாதன் வழி வந்த மகானே. வியாச ராஜனே. குரு ராகவேந்திர மகானே எங்களுக்கு அருள்புரிவாய் என்று அர்த்தம்.
இந்த ஸ்ரீராகவேந்திரரின் ஸ்லோகத்தை, காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி முதலான இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு நைவேத்தியத்தை வழங்குங்கள். ராகவேந்திரரை நினைத்து, ஒருவருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வாழ்வில், நீங்கள் எதிர்பார்க்காத உன்னதங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வார் மகான் ராகவேந்திரர்.