ஜேஇஇ, நீட் தேர்வுகளை தீபாவளிக்குப் பின் நடத்துங்கள்; பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி அவசரக் கடிதம்: திட்டமிட்டபடி நடக்கும் என அதிகாரிகள் தகவல்

by Web Team
0 comment

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஜேஇஇ, நீட் (யுஜி) நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்குப் பதிலாக தீபாவளிப் பண்டிகை முடிந்தபின் நடத்தலாம் என்பதைப் பரிசீலியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாந்துடன் பேசியுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஆனால், திட்டமிட்டபடி செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇஅட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் (யுஜி) நுழைவுத் தேர்வும் நடத்தப்படும் என தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு அமைப்பு (என்டிஏ) தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவைக் கடந்த திங்களன்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மாணவர்களின் ஓராண்டை வீணாக்கக் கூடாது என்றும் தேர்வுகளை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து, தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு அமைப்பு நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், “6,58,273 மாணவர்கள், ஜேஇஇ நுழைவுத் தேர்வு (மெயின்) எழுதும் நிலையில், 6.4 லட்சம் மாணவர்கள் அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துவிட்டார்கள்.

துமட்டுமல்லாமல் மாணவர்கள் கேட்டிருந்த தேர்வு எழுதும் மையமே 99.07 சதவீதம் பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என மகிழ்வுடன் தெரிவிக்கிறோம். 142 மாணவர்கள் மட்டுமே வேறு தேர்வு மையம் கேட்டுள்ளார்கள். அவர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்.

திட்டமிட்டபடி செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇஅட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் (யுஜி) நுழைவுத்தேர்வும் நடத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரி பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “ நுழைவுத் தேர்வுக்கு இளைஞர்கள் முழுமையாகத் தயாராக வேண்டும். கரோனா காலத்தில் நடக்கும் நுழைவுத் தேர்வால் தங்களுக்குப் பலன் கிடைக்குமா அல்லது பின்னடைவாகுமா என்ற விரக்தி பரவலாக இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் கரோனா வைரஸ் பரவல் காலத்தில் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்குப் போதுமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தற்போது அது சாதகமாக நாட்டில் இல்லை.

நீதிமன்றத் தீர்ப்பு என்பது அரசாங்கம் எப்போது தேர்வை நடத்த வேண்டும் என்பதைப் பிணைக்கும் வகையில் இல்லை. ஆதலால், தற்போது தேர்வை நடத்துவது தற்கொலைகளுக்கு இட்டுச் செல்லும்.
எனவே, நுழைவுத் தேர்வுகளைத் தீபாவளிக்குப் பின் நடத்த வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்துங்கள் என்று தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

இது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடனும் பேசிவிட்டேன். என்னுடைய ஆலோசனையைக் கேட்டுக்கொண்டார். இந்த முடிவை எடுக்க உங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதால், நான் அவசரமாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

ஆதலால், தீபாவளிக்குப் பின் நுழைவுத் தேர்வுகளை நடத்தலாம் என்று கல்வித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடுங்கள்”.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராஷ்ட்ரிய லோக் கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வானும், நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரமேஷ் பொக்ரியாலிடம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment