வாராஹியை நினைத்து விளக்கேற்றுங்கள்; தீய சக்தியை விரட்டும் பஞ்சமி வழிபாடு!

by Web Team
0 comment

வளர்பிறை பஞ்சமி திதியில், வாராஹி தேவியை நினைத்து மாலையில் விளக்கேற்றுங்கள். தீய சக்தியையெல்லாம் விரட்டுவாள். அரணெனக் காப்பாள்.

சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வாராஹி தேவி. மகா சக்தியாகத் திகழும் பராசக்தி, தன்னில் இருந்து ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள் என்றும் அவர்களைக் கொண்டு அசுரக் கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இந்த சக்திகள் ஏழு என்றும் இவர்களை சப்த மாதர்கள் என்றும் விவரிக்கிறார்கள் ஸாக்த வழிபாடு செய்பவர்கள்.

சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹிதேவி. சப்தமாதர்களுக்கு சந்நிதி என்பது சோழர்கள் காலத்தில் பல ஆலயங்களில் அமைக்கப்பட்டன. யுத்தம் முதலான முக்கிய நிகழ்வுகளின் போது, சப்த மாதர்களுக்கு படையல் போடப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன.

சப்தமாதர்களில், கெளமாரி, மகேஸ்வரி என தெய்வங்களுக்கு தனித்தனியே ஆலயங்கள் எழுப்பப்பட்டன. பின்னாளில், அடுத்தடுத்த கட்டங்களில், வாராஹிக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு, பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் பெரியகோயிலில் வாராஹியை தரிசிக்கலாம். ஆனால் ராஜராஜ சோழன் வாராஹி தேவிக்கு, பெரியகோயிலில் சந்நிதி எழுப்பவில்லை. பின்னாளில்தான், சமீபத்தில்தான் வாராஹியின் சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து வணங்கி வருகிறார்கள் பக்தர்கள்.

பஞ்சமி திதி என்பது வாராஹியை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். இந்தநாளில், மனதார வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எல்லா நல்லதுகளும் நடத்தித் தருவாள் வாராஹி. வளர்பிறை பஞ்சமிதான் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது என்றாலும் இன்றைய பஞ்சமியில், தேய்பிறை பஞ்சமியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

இன்று பஞ்சமி. இந்தநாளில், மாலையில் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் அமர்ந்து வாராஹி அம்மனை மனதுக்குள் கொண்டு வந்து, உலக மேன்மைக்காகவும் குடும்ப நலனுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். உலகத்தின் தீயசக்திகளையெல்லாம் அழித்து நம்மைக் காத்தருள்வாள் தேவி.

Related Posts

Leave a Comment