சங்கடம் தீரும்; சந்தோஷம் பெருகும்; சக்கரத்தாழ்வார் மகிமை!

by Web Team
0 comment

சங்கடங்களையெல்லாம் தீர்த்து, வாழ்வில் சகல சந்தோஷங்களையும் செளபாக்கியங்களையும் தந்தருளும் சக்கரத்தாழ்வார் காயத்ரியைச் சொல்லி, வழிபடுங்கள். தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். இன்னல்களையெல்லாம் தீர்த்தருள்வார் சுதர்சனர்!

சுதர்சனர் என்றால் நல்ல வழியைக் காட்டி அருளுபவர் என்று பொருள். இனியவர் என்று அர்த்தம். திருமாலின் திருக்கரங்களில் ஆயுதமாகத் திகழ்பவர். சுதர்சனம் என்றால் சக்கரம் என்று அர்த்தம். இந்த சக்கரம், நல்வழி காட்டக்கூடியது. உலகை உய்விக்கக் கூடியது. மகாவிஷ்ணுவின் வலது திருக்கரத்தில் இருந்தபடி, இந்த உலகத்து ஜீவராசிகளையெல்லாம் வாழ்வதற்கு அருள் செய்யக்கூடிய வலிமை மிக்கது என்கிறது விஷ்ணு புராணம்.

விஷ்ணுவின் பக்தர்களைக் காக்கின்ற கடமையும் பொறுப்பும் சுதர்சன சக்கரத்துக்கு அதாவது சக்கரத்தாழ்வாருக்கு உண்டு. அதேசமயம், எதிரிகளையும் தீயவர்களையும் துஷ்ட சக்திகளையும் அழிக்கக் கூடிய வேலையும் சக்கரத்தாழ்வாருக்கு உண்டு என்கிறது புராணம்.

புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் பெருமாளை வழிபடுவதும் சக்கரத்தாழ்வாரை வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும். தமிழகத்தில் பெரும்பான்மையான பெருமாள் கோயில்களில், சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சந்நிதி உண்டு.

திருச்சி ஸ்ரீரங்கம், மதுரை திருமோகூர், கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணி முதலான சந்நிதிகளில், சக்கரத்தாழ்வார் அழகும் கருணையும் கொண்டு அற்புத மூர்த்தங்களாக திருக்காட்சி தந்தருள்வார்.

சுதர்சனரை, சக்கரத்தாழ்வாரை அவருக்கு உரிய காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள். மனோபலம் பெருகும். எதிரிகள் தொல்லை ஒழியும். காரியத்தடைகளை தகர்த்து அருளுவார்.

ஸ்ரீசுதர்சன காயத்ரி

ஓம் சக்ர ராஜாய வித்மஹே

சகஸ்வர ஜ்வாலாய தீமஹி

தந்நோ சக்ர ப்ரசோதயாத்

ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருக்கரங்களில் சுழலும் சக்கரமே. கவலைகளின் இருளை நீக்கும் கனலே. எதிரிகள் மீதான பயத்தை தீர்த்து அருளுவா. சுதர்சனா உனக்கு நமஸ்காரம் என்று பொருள்படுகிற இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்கள் அனைத்தையும் இனிதே நடத்தித் தந்தருள்வார்.

சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்து, சந்தோஷத்தைத் தந்தருளும் சக்கரத்தாழ்வாரை வழிபடுவோம். நல்வழி காட்டுவார் சுதர்சனர்.

Related Posts

Leave a Comment