அமெரிக்காவில் தடை உத்தரவை எதிர்க்கும் டிக் டாக்

by Web Team
0 comment

சர்வதேச அளவில் டிக் டாக்கைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 70 கோடி என்றும், இதில் 10 கோடி பேர் அமெரிக்கப் பயனர்கள் என்றும் டிக் டாக் அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் டிக் டாக்கைத் தடை செய்யும் ட்ரம்ப்பின் உத்தரவை எதிர்த்து டிக் டாக் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் தங்களது சுய விவரங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளது.

70 கோடி என்ற இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் இருக்கும். ஏனென்றால், இது ஜூலை மாதம் வரையிலான கணக்கு என்று கூறப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் 200 கோடி முறை டிக் டாக் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிஎன்பிசி கூறியுள்ளது. அமெரிக்காவில் தினமும் டிக் டாக்கைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 5 கோடி.

ட்ரம்ப்பின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடரவுள்ளதாக வலைப்பதிவில் அறிவித்துள்ள டிக் டாக், அமெரிக்காவில் 1,500 பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், மேலும் கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க், டென்னெஸ்ஸீ, ஃப்ளோரிடா, மிஷிகன், இல்லினாய் மற்றும் வாஷிங்டன் ஸ்டேட் ஆகிய இடங்களில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

டிக் டாக்கால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ட்ரம்ப்பின் நிர்வாகம் கூறியுள்ளதைக் கடுமையாக மறுத்துள்ள டிக் டாக் நிறுவனம், ட்ரம்ப்பின் நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஒழுங்கான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. டிக் டாக் அச்சுறுத்தல் என்பதற்கான சரியான ஆதாரங்களையும் ட்ரம்ப்பின் நிர்வாகம் முன் வைக்கவில்லை, மேலும் இந்த உத்தரவுக்கான காரணத்தையும் கூறவில்லை என்று டிக் டாக் கூறியுள்ளது.

“வழக்கு தொடர்வதை விட ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அமெரிக்காவில் எங்கள் செயல்பாட்டை நிறுத்த ட்ரம்ப் பிறப்பித்திருக்கும் உத்தரவின் மூலம் அமெரிக்காவில் 10,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும், இந்தச் செயலியைப் பொழுதுபோக்குக்காக, சக மனிதர்களுடன் நட்புக்காக, வாழ்வாதாரத்துக்காகப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான அமெரிக்கப் பயனர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே எங்களுக்கு (வழக்குத் தொடர்வதைத் தவிர) வேறு வழி இல்லை” என்று டிக் டாக் கூறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி ட்ரம்ப் நிர்வாகம் இன்னொரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதன்படி, டிக் டாக்கின் அமெரிக்கப் பிரிவை அடுத்த 90 நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் என்று சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment