ஒரு மாதத்தில் 400 பெண்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பெண்மணி எலிசபெத்.

by Web Team
0 comment

கொரோனா அச்சம் காரணமாக வீட்டு வேலைக்குச் செல்லும் ஏராளமான பெண்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் இப்போதுதான் பலருக்கு மீண்டும் வேலை கிடைக்கத் தொடங்கியுள்ளது.

சென்னையைப் பொருத்தமட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் வீட்டு வேலை செய்யும் ஏராளமான பெண்கள் உள்ளனர். சமையல், குழந்தை வளர்ப்பு, முதியவர்களைப் பராமரித்தல், வீட்டை சுத்தப்படுத்துதல் ஆகிய வேலைகளை அவர்கள் செய்கின்றனர்.

தினந்தோறும் வந்து செல்வோரும், வீடுகளிலேயே தங்கி வேலை பார்ப்போரும் ஏராளம். ஆனால், கொரோனா பரவத் தொடங்கிய காலம் முதல் வீட்டு வேலை செய்து வந்த பெண்களை வீட்டில் உள்ளவர்கள் வரவேண்டாம் என்று அனுப்பி விட்டனர். இதனால் அவர்கள் வருமானம் இன்றி வேறு வேலையும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களால் தங்களுக்கு நோய்த்தொற்று வந்துவிடுமோ என்ற அச்சமே வேலையிழப்புக்கு முக்கிய காரணம். மற்றொரு பக்கம் வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டிலேயே இருப்பதால் அவர்களுக்குத் தனியாக வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையும் பல இடங்களில் உருவாகிவிட்டது.

இப்படி பலதரப்பட்ட காரணங்களால் வீட்டு வேலை செய்து சம்பாதித்தவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிப் போனது. இந்தச் சூழ்நிலையில் சென்னை வடபழனியைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண்மணி தற்போது இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வுக்கு புதிய வெளிச்சம் காட்டியிருக்கிறார்.

வேலை இல்லாததால் வருமானமும் இல்லாமல் தங்குவதற்கு இடமும் இல்லாமல் நடுத்தெருவில் நின்ற பல பெண்களை அழைத்து வந்து தங்குவதற்கு இடமும் உணவும் கொடுத்து மாதம் 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் வகையில் வேலைக்கு அனுப்பி வைக்கிறார். முதியோர்களைப் பராமரித்தல் மனநோயாளிகளைப் பார்த்துக் கொள்வது என பலதரப்பட்ட வேலைகளுக்கும் அனுப்பி வருகிறார்.

கொரோனா நோயாளிகளை வீட்டில் கவனித்துக் கொள்வது, முதியோர் பராமரிப்பு, வீடு வீடாகச் சென்று கொரோனா கணக்கெடுப்பு போன்ற பல வேலைகள் இவர் மூலம் பலருக்குக் கிடைத்துள்ளன. மாற்று வழி என்ன என்று தெரியாமல் நிற்பவர்களுக்கு வழிகாட்டியாய் நின்று வாழ்க்கை பாதையையும் காட்டுகிறார் எலிசபெத். இந்தப் பணி மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பசித்தவனுக்கு மீன் கொடுப்பதைக் காட்டிலும் மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே நல்லது என்பார்களே அதை நினைவுகூர்கிறார் எலிசபெத்.

Related Posts

Leave a Comment