சர்வதேச அளவில் ரூபேவை பிரபலப்படுத்த திட்டம்: புதிதாக என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் துணை நிறுவனம் உருவாக்கம்

by Web Team
0 comment

டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்பான தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் ரூபே மற்றும் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்பேஸ் (யுபிஐ) உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை சர்வதேச அளவில் பிரபலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் என்ற பெயரில் துணை நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

சில நாடுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையிலான செயல்பாடுகள் உள்ளன. அவற்றுடன் இணைந்து நாடுகளிடையிலான பரிவர்த்தனை மேற்கொள்ள வசதியாக புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்நாட்டு பரிவர்த்தனைக்கென யூனியன்பே என்ற டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனமும் தற்போது சர்வதேச அளவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. ஜப்பானில் ஜேசிபி நெட்வொர்க் என்ற டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்பு செயல்படுகிறது. இந்நிறுவன பரிவர்த்தனை 190 நாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது.

விசா மற்றும் மாஸ்டர் கார்டு உள்ளிட்ட அட்டை மூலமான பரிவர்த்தனைக்கு பதிலாக மாற்று வழி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான தடை காரணமாக இவ்விரு அட்டைகள் மூலமான பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சர்வதேச தடையின் கீழ் இவ்விரு அட்டை பரிவர்த்தனைகளும் வருவது குறிப்பிடத்தக்கது.

ரிதேஷ் சுக்லா தலைவர்

என்பிசிஐ நிறுவனம் புதிதாக உருவாக்கியுள்ள சர்வதேச நிறுவனத்துக்கு (என்ஐபிஎல்) தலைமைச் செயல் அதிகாரியாக ரிதேஷ் சுக்லாவை நியமித்துள்ளது. சர்வதேச அளவில் விரிவுபடுத்துவது தொடர்பான உத்திகளை வகுப்பது அதற்குரிய தொழில்நுட்பங்களை வடிவமைப்பது மற்றும் சர்வதேச சந்தைகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற தீர்வுகளை அளிப்பது உள்ளிட்ட பணிகளை இவர் மேற்கொள்வார். இப்புதிய பொறுப்பை ஏற்பதற்கு முன்பு மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளின் பொறுப்பாளராக சுக்லா இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள், இந்திய நிறுவனமான என்பிசிஐ மூலமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இதன்மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் விரிவுபடுத்தும் பிற நாடுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் என்ஐபிஎல் அளிக்கும் என்று தெரிகிறது.

Related Posts

Leave a Comment