ராகுல் “ராஜீவாக” முயற்சித்தது போதும்.. இனி பிரியங்கா ஏன் “இந்திரா” ஆக கூடாது… பரபரக்கும் காங்கிரஸ்

by Web Team
0 comment

சென்னை:
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என இன்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், சோனியாவே மேலும் 6 மாசத்துக்கு பொறுப்பை தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், வேறு ஒரு தலைவரையும் நியமிக்க சோனியா காந்தி சொல்லி உள்ள நிலையில், அந்த பொறுப்பு பிரியங்கா காந்திக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்தியாவின் இன்றைய சூழலில் சோனியா காந்தியின் பங்கு மிகவும் முக்கியமானது.. அவர் இல்லாத காங்கிரஸை கற்பனை செய்யகூட முடியவில்லை. அன்று சோனியா என்ற அச்சாணியில்தான் பரந்து விரிந்த பாரத தேசம் சுழன்று கொண்டிருந்தது.. அப்போது நாட்டில் எந்த பகுதியிலும் மதக்கலவரங்கள் இல்லை, அரசியல் வன்முறைகள் இல்லை.. கூர்க்காக்கள், சீக்கியர்கள், அசாமியர்கள் போன்ற பிரிவினைவாதிகளின் வன்முறை சம்பவங்கள் இல்லை.. இப்போது போல இந்தி மொழி போராட்டங்கள் இல்லை.

எதிர்க்கட்சிகள்
மத்திய அரசுக்குள்ளே – காங்கிரஸ் கட்சிக்குள்ளேயோ – தோழமை கட்சிக்குள்ளேயோ எந்த மோதலும் இல்லை.. எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு முறை இடையூறுகள் செய்து, நாடாளுமன்றத்தை முடக்கினாலும், அவர்களை சோனியா கடிந்து பேசியதில்லை.. தனிப்பட்ட முறையில் யாரையும் மனம் புண்படும்படி விமர்சித்ததும் இல்லை… எதிர்க்கட்சி தலைவர்களாக இருந்தாலும் அவர்களிடம் நட்போடு பேசும் நற்குணமும் அவருக்கு உண்டு.

அதிரடிகள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படாமல், பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்காமல், அவர்களை மதித்து போற்றும் மாண்பும் சோனியாவுக்கு உண்டு. அன்றைய பிரதமர் மன்மோகனுக்கு முழு சுதந்திரத்தை தந்தார்.. யாராவது ஊழலில் சிக்கினால், தயவுதாட்சண்யம் இல்லாமல் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். முக்கியமாக, இவர் மீது இன்னமும் ஊழலின் நிழல்கூட படியாமல் இருப்பதற்கு ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.. இவர்களை பயன்படுத்தி சிலர் ஆதாயம் அடைந்தார்களே தவிர, நேரு குடும்பத்தில் உள்ள யாருமே கோர்ட், வழக்கு, கைது, சிறை என்ற அவப்பெயருக்கு ஆளானதில்லை.

உடல்நலம்
ஆனால், 2011-ல்தான் சோனியாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது… வெளிநாட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவும் சென்றார்.. வெளிநாட்டு சிகிச்சை என்றாலே அச்சமும், பயமும் நமக்கு தோன்றிவிடும்.. அண்ணா, எம்ஜிஆர் முதல் கவியரசு கண்ணதாசன் வரை வெளிநாட்டு சிகிச்சைகள் எதிர்பார்த்த பலன்களை தரவில்லை.. அதனால்தான் சோனியா காந்தி விஷயத்தில் அப்போதே பதட்டமானோம்.

நெருக்கடிகள்
எப்போது இவர் அன்று வெளிநாடு போனாரோ அப்போதே இந்தியாவில் 2 பெரும் நெருக்கடிகளை நாடு சந்தித்தது. ஒன்று அன்னா ஹசாரே விவகாரம்.. மற்றொன்று பிரணாப் – சிதம்பரம் இடையே நடந்த உரசல்! சோனியா நாட்டில் இல்லாத நேரத்திலேயே, ஒரு பெரும் நெருக்கடியை தந்து மன்மோகன் அரசை கவிழ்த்து விடலாம் என்று பாஜக காய் நகர்த்தியது.

எதிர்க்கட்சிகள்
அதற்கு எடுப்பார் கைப்பிள்ளையாக கிடைத்தார் அன்னா ஹசாரே… கொக்கின் தலையில் வெண்ணையை வைத்த கதை என்பதை சில எதிர்க்கட்சிகள் அப்போது உணரவில்லை. சோனியா சிகிச்சையில் இருந்து திரும்பி வந்தவுடனேயே இந்த 2 பிரச்சனைகளை சரி செய்தார்.. எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பை அசால்ட்டாக தகர்த்தெறிந்தார். அப்பேர்ப்பேட்ட ஆளுமையும் திறமையும் மிக்க சோனியாவை உடல்நலம் அதிகமாகவே சோதித்து வருகிறது.

ராகுல்
இந்த சமயத்தில்தான் ராகுல் தீவிரமாக களமிறக்கப்பட்டார்.. ஆனால் , அதற்கு அவர் பொருத்தமானவராக இல்லை என்பதே அன்றைய – இன்றைய உண்மை.. அவர் இன்னும் முழுமையாக பக்குவப்படவில்லை.. அரைகுறையான மற்றும் அவசரமான விமர்சனங்களை அள்ளி வீசி வருகிறார்.. இப்போதாவது கொஞ்சம் பரவாயில்லை.. முன்பெல்லாம் ஒண்டிக்கு ஒண்டி வா என்ற பாணியில்தான் அரசியல் நடத்தினார்.

சுய ஆய்வு அதனால்,
தற்போது கட்சி இருக்கும் நிலைமை பற்றி நேர்மையாக சுயஆய்வு செய்ய ஒட்டுமொத்த காங்கிரஸே தயார் ஆக வேண்டும் என்றுதான் நமக்கு சொல்ல தோன்றுகிறது.. காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைஞர்கள் நம்பிக்கையிழந்து கொண்டு வருகிறார்கள்.. அவர்களை நம்பிக்கையை மீட்டெடுக்க வலுவான தலைமை தேவை என்ற புள்ளியில் வந்து காங்கிரஸ் இன்று நின்றுள்ளது. நிலையான மற்றும் முழுநேரத் தலைவர் இல்லாததால், கட்சி திசைதெரியாமல் பயணப்பட ஆரம்பித்துவிட்டது.

இந்திரா காந்தி பாட்டியின் தோற்றமும்,
நிதானமும், பொறுமையும் ஒரு பிரதமர் பதவிக்கு தேவை.. அது பிரியங்காவிடம் நிறையவே உள்ளது… படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.. இருவருக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகளும் உள்ளன… இந்திரா காந்தி மீது மக்களுக்கு ரொம்ப பிரியம் இருந்தது… சாமான்ய மக்களுடன் எளிதாக கலந்து பழகுவார்… அப்போது அவரது முகத்தில் ஒரு உறுதிப்பாடு மட்டுமல்ல.. பாசத்துக்குரியவராகவும் இருப்பார்.. அதேபோலதான் பிரியங்காவும்.. மக்களுடன் இணைகிறார்.. வேகமாக உரையாடும் திறன் உள்ளது.

பிரச்சாரங்கள் ஆனால்,
இந்த காரணங்களால் மட்டும் அரசியல் கணக்குகள் மாறிவிடுமா? என்று சொல்லிவிட முடியாது… எனினும், வீறு கொண்டு புடைத்து வரும் பாஜகவுக்கு சம்மட்டி பதிலை தர பிரியங்காவால் நிச்சயம் முடியும்… பாஜகவை தோற்கடிக்கவும், மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் சமூக பிரச்சாரத்திற்கு மாற்றாக நிச்சயம் பிரியங்கா இருப்பார்.. குறைந்தபட்சம் கட்சிக்குள் மேலும் விரிசல் விழாமல் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்.. இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தால், காங்கிரஸ் படுகுழியில் இருந்து சற்றே மீளும்… இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தறிகெட்ட காங்கிரஸாக மாறிவிடும் அபாயமும் உள்ளது என்பதே யதார்த்த உண்மை!

Related Posts

Leave a Comment