‘விஜய் 65’ படம் ‘துப்பாக்கி 2’? – ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

by Web Team
0 comment

‘விஜய் 65’ படம் ‘துப்பாக்கி 2’ ஆக இருக்குமா என்ற கேள்விக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளித்துள்ளார்.

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

சன் பிக்சர்ஸ் – விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டாலும், கரோனா அச்சுறுத்தல் முடிந்து படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளிக்கப்பட்டவுடன் அறிவிப்பை வெளியிடலாம் என காத்திருக்கிறது படக்குழு. ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் 4-வது படம் இதுவாகும்.

இந்தப் படம் ‘துப்பாக்கி 2’ எனவும், ‘துப்பாக்கி’ தலைப்பை தயாரிப்பாளர் தாணு கொடுக்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 23) டோக்கியோ தமிழ் சங்கத்தின் ஃபேஸ்புக் லைவ்வில் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில், “மீண்டும் விஜய் சாருடன் பண்ற படம், ‘துப்பாக்கி 2’ ஆக இருக்குமா?” என்ற கேள்விக்கு ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பதாவது:

“எந்தப் படத்தின் தொடர்ச்சியாகவும் இல்லாமல், ஒப்பனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்தும். ஒரு படத்தின் தொடர்ச்சி என்பது மீண்டும் ஒரு வட்டத்துக்குள் போட்டு அடைப்பது மாதிரி தான். அதைத் தாண்டி ஒன்று யோசிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணமாக இருக்கும்.

சும்மா இணையதளங்களில் தலைப்புக் கொடுக்கப்படவில்லை என்று வருவது எல்லாம் பொய். அதில் எதுவுமே உண்மையில்லை. இதனால் படத்தில் சிக்கல் என்பதெல்லாம் கிடையாது. நான் பொதுவாகச் சொல்கிறேன். அது என்ன மாதிரியான படம் என்பது தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து முறைப்படியான அறிவிப்பு வந்தால் தான் சரியாக இருக்கும்”

இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment