‘சூரரைப் போற்று’ படம் இணையதளத்தில் வெளியீடு – நடிகர் சூர்யா அறிக்கை

by Web Team
0 comment

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இணையதளத்தில் வெளியீட முடிவு செய்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், பிரச்சினைகளில் மூழ்கி விடாமல், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம். இயக்குனர் சுதா கொங்கராவின் உழைப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் என் திரைப்பயணத்தில் மிக சிறந்த படமாக நிச்சயம் இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற இந்த படத்தை திரையரங்கில் அமர்ந்து ரசிகர்களுடன் அமர்ந்து கண்டுகளிக்கவே மனம் ஆவல் கொள்கிறது.

ஆனால், காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை. இந்த திரைப்படத்தை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கிய கடமை. என் 2 டி நிறுவனம் இதுவரை 8 படங்களை தயாரித்து வெளியீடு செய்து இருக்கிறது. மேலும் 10 படங்கள் தயாரிப்பில் உள்ளன. பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் இணையம் வழி வெளியிட முடிவு செய்து இருக்கிறோம். இருப்பதை அனைவருடன் பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. ‘சூரரைப் போற்று’ திரைப்பட வெளியீட்டு தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு ரூ.5 கோடியை பகிர்ந்து அளிக்க முடிவு செய்து இருக்கிறேன்.

பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்த களத்தில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கும் இந்த ரூ.5 கோடி பகிர்ந்து அளிக்கப்படும். உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், வாழ்த்தும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் சூர்யா கூறியிருக்கிறார்.

Related Posts

Leave a Comment