புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து: மத்திய அரசின் உத்தரவை ஏற்று நடவடிக்கை

by Web Team
0 comment

மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ம் தேதி பொது ஊரடங்கை அறிவித்தது. இதனால் மக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

இந்த சூழலில் மாநிலங்களுக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் பல்வேறு மாநில அரசுகள் கெடுபிடிகள் விதித்து வருவதாக புகார்கள் எழுந்ததைத்தொடர்ந்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர், அஜய் பல்லா, கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அதில், “மாநிலங்களுக்கு உள்ளும் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்கவும் தடைகள் கூடாது என மத்திய அரசின் தளர்வு வழிகாட்டுதல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பதால் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகின்றன.

எனவே மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க சிறப்பு அனுமதி, இ-பாஸ் போன்றவை தேவையில்லை. மாநில அரசின் கட்டுப்பாடுகள், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் புதுச்சேரிக்குள்ளேயும், வெளிமாநிலங்களுக்கும் செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment