இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது விழா தள்ளிவைப்பு?

by SL1234-A
10 views

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘கேல்ரத்னா’ மற்றும் ‘அர்ஜூனா’ விருதும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டுக்கு தொடர்ந்து சேவையாற்றுபவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ‘தயான் சந்த்’ விருதும் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கேல்ரத்னா விருது பெறுபவர்களுக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.7.5 லட்சமும், மற்ற 3 விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இந்த விருது வழங்கும் விழா தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-ந் தேதி (இந்திய ஆக்கி ஜாம்பவான் தயான்சந்த் பிறந்த நாள்) டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுவது வாடிக்கையாகும். ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா குறிப்பிட்ட தேதியில் அரங்கேறுமா? என்பது பெருத்த கேள்விக்குறியாகி இருக்கிறது.

தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பது வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக மே மாதம் தான் தொடங்கியது. சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனத்தின் ஒப்புதலுடன் வீரர்கள் தனிப்பட்ட முறையிலும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் எப்போதும் இல்லாத வகையில் இந்த தடவை 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் விருதுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

விருது தேர்வுக்கான நடைமுறைகள் இன்னும் தொடங்கப்படாததால் இந்த ஆண்டில் விருது வழங்கும் விழா நடைபெற வாய்ப்பில்லை என்றும், காலவரையின்றி தள்ளிவைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘ஜனாதிபதி மாளிகையில் இருந்து விளையாட்டு விருது விழா தொடர்பாக எங்களுக்கு எந்தவித தகவலும் இதுவரை வரவில்லை. தகவலுக்காக நாங்கள் காத்து இருக்கிறோம். எனவே இந்த நேரத்தில், என்ன நடக்கும் என்று சொல்வது மிகவும் கடினமானதாகும். தற்போது நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே ஜனாதிபதி மாளிகையில் விழா எதுவும் நடத்த முடியாது. கடந்த காலங்களிலும் விளையாட்டு விருது விழா காலதாமதமாக நடத்தப்பட்டு இருக்கிறது. ஒருவேளை ஆகஸ்டு 29-ந் தேதி இந்த விழா நடக்காவிட்டால், ஒன்று அல்லது 2 மாதம் கழித்தும் நம்மால் நடத்த முடியும். தற்போது எல்லோருடைய நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

‘இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருது வழங்கும் விழா கால தாமதமாகும் என்பதில் சந்தேகமில்லை. அதிக அளவில் குவிந்து இருக்கும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விருதுக்குரிய நபரை தேர்வு செய்வது கடினமான இலக்காகும். இந்த பணி இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனாலும் நிச்சயம் விருது வழங்கப்படும். தகுதியானவர்களுக்கு விருது வழங்கப்படுவது மறுக்கப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று மத்திய விளையாட்டு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy