திருமந்திரம் ( பாகம் 33 )

by News Editor
0 comment

திருமந்திரம் ( பாகம் 33 )

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

மயங்கித் தவிக்கும் மனித வாழ்வு

“போதிரண்டு ஓதிப் புரிந்தருள் செய்திட்டு

மாதிரண் டாகி மகிழ்ந்துஉட னேநிற்கும்

தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்

வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே”                 பாடல் 217

காலை மாலை ஆகிய இரு வேளையும் வேதம் ஓதி வேள்வி செய்தால் குண்டலினி (மூலாதாரம்) மேலோங்கிச் சிவசக்தியாய் நிற்கும். இருவருடைய உயிர்ச் சத்து (சுக்கிலம், சுரோணிதம்) கலப்பால் உடல் இரண்டு சிறகடித்து வானில் பறப்பது போலிருக்கும். ஆணும் பெண்ணுமாகிய பறவைகள் இதனால் மாற்றம் அடைந்து மயக்கம் கொள்ளும்

புருவ மத்தியில் புகும் ஒளி காணீர்

“நெய்நின்று எரியும் நெடுஞ்சுடரே சென்று

மைநின்று எரியும் வகைஅறி வார்கட்கு

மைநின்று அவிழ்தரும் அத்தினம் ஆம்என்றும்

செய்நின்ற செல்வம் தீஅது வாமே”                                   பாடல் 218

நெய்விட்டு எரியும் வேள்வித் தீயின் சோதி ஒளி வழியே, புருவ மத்தியில் சுடர்விடும் சோதி ஒளியைக் காண முடிந்தவர்களுக்கு, அப்படி அறிகிற அந்த நாள் மல இருள் நீங்கப் பெறும் நன்னாள் ஆகும். இதனைத் தினம் செய்யச் செய்கின்ற செல்வம் அந்தத் தீ ஒளியே (அக்கினியே) ஆகும்.

வாழி செய்க – வேள்வித் தீ ஒளிர

“பாழி அகலும் எரியும் திரிபோல்இட்டு

ஊழி அகலும் உறவினை நோய்பல

வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்

வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே”                                 பாடல் 219

பள்ளமான ஓம குண்டமும், அந்த அகலில் எரியும் திரி போன்ற ஆல், அத்தி போன்ற மரங்களின் குச்சிகளால் (சமித்து) வேள்வித் தீ வளர்த்தால் வினைப்பயனால் விளைந்த நோய் பலவும் வீழ்ந்து படும். அவ்வேள்வித் தீ வினைப்பயனைச் சுட்டெரிக்கவும் வல்லதாகும்.

பெரும் செல்வம் தரும் வேள்வி

“பெரும்செல்வம் கேடென்று முன்னே படைத்த

அரும்செல்வம் தந்த தலைவனை நாடும்

வரும்செல்வத்து இன்பம் வரவிருந்து எண்ணிப்

பெரும்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே”                           பாடல் 220

பொன், பொருள் என்று தேடிவைத்த பெரிய செல்வம் எல்லாம் துன்பமே தரும். எனவே முன்னே அருளப்பட்ட, அருட்செல்வம் அருளிய இறைவன் திருவருளை நாடுங்கள். எனித் தொடரும் செல்வப் பயனையும், பேரின்பப் பயனையும் எண்ணியே, இப்பெருஞ் செல்வங்களைத் தர வல்ல வேள்வியை அந்தணர் விரும்பிச் செய்கின்றார்கள்.

ஓமத் தலைவன் ஓம் நமசிவாயம்

“ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை

ஒண்சுட ராகி என்உள்ளத்து இருக்கின்ற

கண்சுட ரோன்உல கேழும் கடந்தஅத்

தண்சுடர் ஓமத் தலைவனும் ஆமே”                                  பாடல் 221

அழகிய ஒளிச் சுடர் போன்றவனை, அழிவில்லாத ஆனந்தத் தலைவனை, என் உள்ளத்தின் உள்ளே ஒளிவிடும் ஆத்மசோதியாக அமர்ந்திருக்கின்ற, முக்கண்ணும் மூவொளிச் சுடராக இருக்கின்ற முதல்வனான சிவனே ஏழுலகங்களும் பரவி இருக்கின்ற குளிர்ந்த அருட்பார்வை கொண்டவன். அவனே வேள்விக்குத் தலைவனாவான்.

செம்பொற் சோதி சிவன்

“ஓமத்துள் அங்கியின் உள்உளன் எம்இறை

ஈமத்துள் அங்கி இரதம்கொள் வான்உளன்

வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்

கோமத்துள் அங்கி குரைகடல் தானே”                                 பாடல் 222

வேள்வியில், வேள்வித் தீ வளர்க்கும் ஓம நெருப்பின் உள் மறைந்திருக்கிறான் எம் இறைவனான ஈசன். இறுதி நாளில் சுடுகாட்டில் எரியும் நெருப்பிலும் அவன் விரும்பி இருப்பான். நூலாக இருந்து, நெய்யப் பெற்று, ஆடையான பிறகு, வலிமை அடைவது போல, வினைப்பயனாகிய கடலை அழிப்பதும், ஆன்மாவிற்கு வலிமை சேர்ப்பதும், வேள்வித் தீ வளர்க்கும் பெரு நெருப்பே ஆகும்.

வேள்வித் தலைவன் வேத முதல்வன்

“அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து

அங்கி இருக்கும் வகைஅருள் செய்தவர்

எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி

பொங்கி நிறுத்தும் புகழ்அது வாமே”                                   பாடல் 223

தீ மூட்டி வேள்வி செய்யும் தவத்திற்குத் தலைவனாக இருப்பவன் தவயோகியாகிய சிவபெருமான். அந்த வேள்வியினைச் செய்யும் சிவாகமம் அருளியவன் சிவபெருமான். இந்த வேள்வித் தவம் எங்கும் நடக்க, வினைகளற்று ஆன்மாக்கள் சிவப்பெரும் பதியில் தங்கி இளைப்பாறச் செய்பவனும் சிவனே. வேள்வியால் விளையும் பயன் இதுவேயாகும்.

அந்தணர் ஒழுக்கம்

“அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்

செந்தழல் ஓம்பி முப்போதும் நியமஞ்செய்

தம்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்

சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே”                                 பாடல் 224

வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், செய்வித்தல், தானம் தருவது, பெறுவது ஆகிய ஆறு பணிகளைச் செய்யும் கடமையுடைய, வேள்வித் தீ வழர்த்து மூன்று வேளையும் நித்திய கடமைகளைச் செய்யும், தங்களுக்குரிய தவ ஒழுக்கம் தவறாது கடைப்பிடித்து, சந்தியா காலங்களில் வேத மந்திரங்கள் ஓதிச் செய்யவேண்டிய நற்கருமங்களை வரையறை செய்பவர்களே மேலான குணநலன்களைக் கொண்ட அந்தணர் ஆவார்.

Related Posts

Leave a Comment