குழந்தைகளுக்கு மரபியல் குறைகளை நீக்க கருவிலேயே திருத்தம் செய்யும் முறை…

by admin
56 views

முக்கியமான நோய்களால் தாக்கப்படுவதை பிறவியிலேயே தடுக்க, கருவிலேயே திருத்தம் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உடலுக்குள் ரத்தம் செலுத்துவதையும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளையும் செய்யவே கூடாது, அது இயற்கைக்கு மாறானது என்று ஒரு காலத்தில் கண்டித்தார்கள். ஆனால், அது இன்றைக்கு பல்வேறு சிகிச்சைகளுக்கு உதவுகிறது.

பெற்றோர் என்றாலே அம்மா, அப்பா என இருவர்தான். கருவில் மைட்டோகாண்ட்ரியா பிரச்சினையால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாத பெண்ணுக்கு, இன்னொரு பெண்ணிடம் இருந்து ஆரோக்கியமான உட்கருவை செலுத்துவதால் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இதன் காரணமாக 2 தாய்கள், ஒரு தந்தையின் மரபணுக்களுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் புதுமுறைக்கு அனுமதி வழங்கலாம் என்று இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதி ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த சிகிச்சை முறை உலகின் எந்த நாட்டிலும் இதுவரை பரிசோதித்து பார்க்கப்படவில்லை, எனவே மனிதர்களிடம் இதுவரை ஆய்வு நடக்கவில்லை. விலங்குகளிடம் ஆய்வு நடத்தி, அதில் வெற்றிகரமான முடிவு கிடைத்திருக்கிறது. இப்படியெல்லாம் மனித கருவில் விளையாட வேண்டுமா என்று பலர் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு காரணம், இந்த புதிய மருத்துவ தொழில்நுட்பம் காரணமாக பிறக்கும் குழந்தையின் உடலில் 2 தாய், ஒரு தந்தையின் மரபணுக்கூறுகள் இடம்பெறும். பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அதன் இழைமணியில் செய்யப்பட்ட திருத்தம், அதன் சந்ததிகளிடமும் தொடரும். மைட்டோகாண்ட்ரியா திருத்தம் ஒரு முறை செய்யப்பட்டால், அடுத்தடுத்து வழிவழியாக வந்துகொண்டே இருக்கும்.

இயற்கையின் படைப்பில் இப்படி விளையாடலாமா? என்ற ஆட்சேபம் பலமாக எழுந்துகொண்டு இருக்கிறது. இருந்தாலும் இந்த புதிய வகை ஆராய்ச்சி ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்கு வழி செய்துள்ளது. மரபியல்ரீதியாக உள்ள குறைகளை நீக்கி ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக்கொள்வதை இந்த முறை சாத்தியப்படுத்தும் என்ற கருத்தை மருத்துவ விஞ்ஞானிகள் முன்வைக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy