திருமந்திரம் ( பாகம் 31 )

by News Editor
0 comment

திருமந்திரம் ( பாகம் 31 )

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

ஆசை யாரை விட்டது

“பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும்

இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்

மருள்கொண்ட மாதர் மயல் உறுவார்கள்

மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே”                                                                                                                        பாடல் 203

பொருள் ஆசையால் குடிகளைத் துன்புறுத்தி வரி கொள்ளும், விடாக் கண்டனாகிய கொடுங்கோல் அரசனானாலும், மெய்ஞ்ஞான அறிவை மறைக்கும் ஆணவத்தை வென்று, இருளில் தோன்றிய மின் ஒளியைப் போன்ற இறையருள் துணையால், ஞான மார்க்கத்தில் செல்லும் ஞானிகளானாலும், மருண்ட விழிப் பார்வை உடைய பெண்களிடம் மயங்குவார்கள். இப்படிப் பெண்களிடம் மயங்கும் மனத்தைத் திருத்த முடியாதவராய் இருப்பர்.” அதாவது அரசனானாலும், ஆண்டியானாலும் பெண்ணாசையை விடுவது பெரியகாரியம்தான் எனக் கூறப்பட்டுள்ளது.

மகளிர் இழிவு

“இலைநல ஆயினும் எட்டி பழுத்தால்

குலைநல வாம்கனி கொண்டுஉணல் ஆகா

முலைநலம் கொண்டு முறுவல்செய் வார்மேல்

விலகுறு நெஞ்சினை வெய்துகொள் வீரே”                             பாடல் 204

நச்சுக் காய் பழுக்கும் எட்டி மரம். அதில் இலை தழைகள் பசுமையாகப் பார்க்க அழகாயிருக்கின்றன. அதில் குலை குலையாகக் காய்த்திருக்கும் காய்கள் கூடக் கண்ணிற்கு விருந்தளிக்கின்றன. எனவே எட்டி மரத்தின் காய் பழுத்துக் கனியானால் அதைக் கைக்கொண்டு தின்னலாமா? கூடாது. தின்றால் உயிர் போய்விடும். இதைப்போலத்தான் மார்பழகையும், முல்லை பல் சிரிப்பழகையும் காட்டி மயக்கும் பெண்கள் மேல் செல்லும் ஆசையை விலக்கிக் கொள்ளுங்கள். அவர்களை நாடிச் செல்லும் மனதைக் கோபித்து அவர்களை மறக்கச் செய்யுங்கள்.

 

கனவின்பம் களவின்பம்

“மனை புகுவார்கள் மனைவியை நாடில்

சுனை புகுநீர்போல் சுழித்துடன் வாங்கும்

கனவது போலக் கசிந்துஎழும் இன்பம்

நனவது போலவும் நாடஒண் ணாதே”                                 பாடல் 205

மற்றவர்கள் வீடுகளுக்குச் செல்பவர்கள் அங்கிருக்கும் மற்றவர் மனைவியை அடைய ஆசைப்பட்டால் அந்த ஆசை ஆழம் காணமுடியாத மலைச் சுனையில் அல்லது சுழித்துப் புரண்டோடும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதைப் போன்ற துன்பத்திற்கு ஆளாக்கும். கனவு காண்பது போலச் சிறிதளவாக அவர்களிடம் பெறும் இன்பம் நனவைப் போல உண்மையானதல்ல. எனவே அதை அடைய ஆசைப்படக் கூடாது.

பொருள் இருக்கும் வரையே போற்றுவர்

“இயல்உறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்

புயல்உறும் புல்லின் புணர்ந்தவர் ஏயினும்

மயல்உறும் வானவர் சாரஇரும் என்பார்

அயல்உறப் பேசி அகன்றுஒளிந் தாரே”                                பாடல் 206

அழகுடைய வாழ்க்கைக்கு ஆதாரமான இளம் பெண் யானை போன்ற பெண்கள், மழை பெய்யத் துளிர்க்கின்ற புல் போல ஆடவருடன் கூடி இன்புற்றிருந்தாலும் அவர்கள் மனம் பொருள் மீதே ஆசை கொண்டலையும். பொருள் உள்ளவர்கள், பெரும் செல்வந்தர்கள் என்றால் அவர்களை “வானுலகத் தேவர்கள் நீங்கள்! வாருங்கள்!” என்றழைப்பர்.  பொருளற்றவர் என்றால் “போ வெளியே” என்று விரட்டியடிக்கவும் செய்வார்கள். பெண்களா இவர்கள்? இல்லை பொருள் கொள்ளும் விலைமாதர்.

உதட்டில் இனிப்பு உள்ளத்தில் கசப்பு

“வையகத்தே மட வாரொடும் கூடிஎன்

மெய்யகத் தோர்உளம் வைத்த விதியது

கைஅகத்தே கரும் பாலையின் சாறுகொள்

மெய்அகத்தே பெறு வேம்பது வாமே”                                 பாடல் 207

உலகில் பெண்களுடன் கூடிப் பெறுவது ஒன்றுமில்லை என மெய்ப்பொருளை உய்த்துணர்ந்த ஞானிகள் கூறும் உண்மையாகும். கையில் பொருள் உள்ளவரை ஆலையில் பிழியப்பட்ட கரும்புச் சாறு போல் பெண்கள் வெளியில் உறவாடுவார்கள். ஆனால் இவர்களின் கள்ள உள்ளம் கசக்கும் வேப்பங்காய் போன்றது.

மாதர் ஆசை மரணத்தின் அழைப்பு

“கோழை ஒழுக்கம் குளம்மூடு பாசியில்

ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்

தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்

பூழை நுழைந்தவர் போகின்ற வாறே”                                 பாடல் 208

பெண்களோடு கூடிப் பெறுவதே இன்பம் என்று ஓயாது உயிர்ச் சக்தியை வீணாக்கி வாழ்பவர் இதைத் தடுத்து நிறுத்தி அடக்காது விட்டு விட்டால் விரைவில் பாவப் புதைகுழியில் விழுந்தவர் போல் அழிவர்.

நல்குரவு

“புடவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை

அடையப் பட்டார்களும் அன்பிலர் ஆனார்

கொடைஇல்லை கோள்இல்லை கொண்டாட்டம் இல்லை

நடைஇல்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே”                        பாடல் 209

புடவை கிழிந்ததுபோல வாழ்க்கையும் வறுமையுற்றது. செல்வம் இருந்தபோது தேடிவந்தடைந்த உறவினர்களும் அன்பில்லாத அயலவராகி விலகி விட்டனர். கொடுத்துதவுபவர் யாரும் இல்லை. நல்ல நாள் விழாக்கள் இல்லை. மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் இல்லை. இப்படி வறுமை வாய்ப்பட்டு வாடும் ஒரு நாட்டில் நல்ல நடத்தை கூட இல்லை. இருப்பவரும் நடைப்பிணகாகவே நடமாடுகின்றனர்.

Related Posts

Leave a Comment