திருமந்திரம் ( பாகம் 27 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
ஒரு வீடு ஒன்பது வாசல்
“வேட்கை மிகுந்தது மெய்கொள்வார் இங்கில்லை
பூட்டும் தறிஒன்று பேரம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே” பாடல் 175
எல்லோருக்கும் உலக வாழ்விலேயே ஆசை மிகுந்திருக்கிறது. உண்மைப் பொருளறியும் எண்ணம் உடையவர்கள் யாரும் இல்லை. இந்த உலக வாழ்விற்கு ஆசைப்படுவதற்குக் காரணமான உடலுக்குள் உயிரைப் பூட்டி வைக்கும் இடம் ஒன்றுள்ளது. ஆனால் தப்பி ஓடவோ ஒன்பது வாசல்கள் உள்ளன. இந்த ஒன்பது வாசலில் ஏதாவது ஒன்றின் வழி உயிர் போய்விட்டால், உறவு முறை காட்டித் தாயார், சுற்றத்தார் எனப் பலரும் வந்து வணங்கிப் பின் (இறந்த உடல் போகச்) சுடுகாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டு, உடலை அங்கேயே (எரிந்து போக) விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இதுதான் உலகியல். அறிக.
சிவ சிந்தனை செல்கதிக்குப் பரிசு
“உடம்போடு உயிர்இடை விட்டோடும் போது
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
சுடும்பரி சத்தையும் சூழகி லாரே” பாடல் 176
உடலோடு பிறந்து தொடர்ந்து வந்த உயிர், நடுவில் உடலை விட்டுவிட்டு ஓடிவிடும். இப்படி ஒடும் உயிரைத் தடுத்து நிறுத்தி, அதை வெற்றி கொள்ள ஒரு வழியும் இல்லை. எனவே உயிர் பிரியும் நேரத்தில் இறைவனை நினையுங்கள். நினைத்தால் உடலைவிட்டு உயிரைப் போக விடுவதான பரிசைத் தர வந்த எம தூதர்கள் அந்த உயிருக்குத் துன்பத்தைத் தர மாட்டார்கள். அதாவது சிவசிந்தனை துன்பம் போக்கும்.
இளமை நிலையாமை
“கிழக்குஎழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழிஇலா மாந்தர்
குழக்கன்று மூத்து எருதாய்ச் சிலநாளில்
விழக்கண்டும் தேறார் வியன்உல கோரே” பாடல் 177
கிழக்கே உதிக்கிற சூரியன் ஓடிப் போய் மேற்கே மறைகிறது. இதைப் பார்த்த பின்னும் கண்ணில்லாதவர்களாகச் சில மக்கள் இருக்கின்றார்களே! இளங்கன்று சில நாளில் வளர்ந்து எருதாகிப் பின் இறப்பதைக் கண்டும் அறிவுத் தெளிவு பெறவில்லையே!
தூண்டி விடுக துரிய ஒளிச் சுடரை
“ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர்அறி யாரே” பாடல் 178
பூமியில் பிறந்து பல ஆண்டுகள் பறந்தோடி விட்டன. என்றாலும் உயிர்க்கு முதல்வனான இறைவனை தம் உடம்பில் இடம் பெறச் செய்து, கண்டு, அவனது அருள் வெள்ளத்தில் மூழ்கி, அவன் பேரருள் திறம் பெற்றாரில்லை. காலம் கடந்து கொண்டே போகிறது. நீண்ட காலம் உலகில் உயிர் வாழ நேர்ந்திருந்தும், ஆன்ம சோதியாய் ஒளிரும் ஆண்டவனின் அருட் சோதியைப் பெற இயலாதவர்களாக இருக்கிறார்களே, இந்த மக்கள்!
உயிர் உள்ள போதே எண்ணுக இறைவனை
“தேய்ந்தற்று ஒழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்தற்றுக் கொள்ளும் உயிர்உள்ள போதே” பாடல் 179
சிறிது சிறிதாக இளமை தேய்ந்து முடிவில் ஒருநாள் முற்றிலும் நீங்க முதுமை வந்து சூழ்ந்து கொண்டது. இப்படி முதுமை வந்த பிறகு செய்து முடிக்க வேண்டிய பல நல்ல செயல்கள் செய்ய இயலாமல் போகும். எனவே உடலில் உயிர் இருக்கும் போதே, இளமையும் வலியும் உள்ள போதே, கங்கை ஆறு பாய்ந்து அடங்கியிருக்கும் விரிசடை உடைய நந்தியெம்பெருமானை எண்ணி உள்ளத்தில் இருத்திக் கொள்ளுங்கள்.
இனிது இனிது இளமை இனிது
“விரும்புவர் முன்என்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரம் காயும் ஒத்தேனே” பாடல் 180
மென்மையான இயல்புடைய பெண்கள் முன்பெல்லாம் என்னை விரும்பினர். கரும்பைப் பிழிந்தால் கடைசியில் வரும் கரும்புச் சாறுபோல், பூ மொக்கு போன்ற மார்பும் அழகிய அணிமணிகளும் கொண்ட பெண்களுக்கு, ஒரு காலத்தில் கரும்பைப் போல் இனித்த நான் இன்று எட்டிக்காய் போல் கசக்கிறேன். காரணம் என் இளமை போய்விட்டது. முதுமை அடைந்து விட்டேன்.
இளமையிலேயே இறை அருள் தேடுக
“பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்துஅண்டம் ஊடறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்புவன் நானே” பாடல் 181
சிறுவன், காளை, கிழவன் (பாலன், இளையன், விருத்தன்) எனப் பருவ காலங்கள் மாறிக் கழிந்து போவதைக் கண் எதிரே கண்டும், இளமைப் பருவம் நிலையற்றது என்று உணராமல் இருக்கின்றார்கள். இந்த உலகையும், இந்த உலகைக் கடந்து நிற்கின்ற அண்டங்களையும் கடந்தும், அவற்றோடு கலந்தும் இருக்கின்ற திருவடித் துணையை, அவன் அருளை நான் மேலும் மேலும் விரும்பித் தொழுவேன்.