திருமந்திரம் ( பாகம் 25 )

by News Editor
0 comment

திருமந்திரம் ( பாகம் 25 )

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

அழியும் உடம்பிது அறிக

“அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்

கொத்தி உலைப்பெய்து கூழ்அட்டு வைத்தனர்

அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்

கத்தி எடுத்தவர் காடு புக்காரே”                             பாடல் 160

உடலும் உயிரும் கருப்பையில் உயிர்ப்படைந்து வளர்ந்து உடலெடுத்துப் பிறந்து உயிர் வாழத் தொடங்கியது. காலப்போக்கில் ஒரு நாள் உயிர் உடலை விட்டுப் போய் விட்டது. உடனே அழுது புலம்பி மற்றவர்கள் அந்த உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றார்கள்.

வீடு பழுதானால் வீழ்ந்து படும்

“மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை

காலும் இரண்டு முகட்டலுக்கு ஒன்றுண்டு

ஓலையான் வேய்ந்தவர் ஊடு வரியாமை

வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே”                     பாடல் 161

உடலுக்கு மேல் உள்ள தலைக்கு முடி இல்லை (வீட்டிற்கு மேல் கூரை). கீழேயும் அடித் தளம் இல்லை. இரண்டு கால்கள் மட்டும் இருக்கின்றன. நடுக்கால் முதுகுத் தண்டின் மேலே சுழு முனை ஒன்று உள்ளது. தலைக் கூரையைத் தசையால் மூடியவர் (ஓலையால் வேய்ந்தவர்) சுழுமுனை நாடி வழியே பிராணனைச் செலுத்தத் தவறினர். இதனால் அழகுறச் செய்யப்பட்ட (வேய்ந்த) வெண்ணிறச் சுக்கிலத்தாலான இந்த உடம்பு அழிகிறது.

மரணம் மனிதனின் துயரம்

“கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை

ஆடும் இலையமும் அற்றது அறுதலும்

பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்

தேடிய தீயினில் தீயைவைத் தார்களே”                               பாடல் 162

வீடு இருக்கிறது அதிலே கோலங்கள் அழகுகள் இல்லை, ஆட்ட பாட்டம் இல்லை அவ்வாறே உடல் வெறும் கூடாகிக் கீழே கிடக்கிறது. அது முன்பு செய்து கொண்டிருந்த அழகு, அலங்காரங்கள் இப்போது இல்லை. அந்த உடலின் உள்ளே ஓடிக் கொண்டிருந்த பிராண ஓட்டம் (உயிர் கூத்து) ஓய்ந்து விட்டது. ஓய்ந்ததனால் (உயிர் போனதால்) சிலர் ஒப்பாரி வைத்து அழுது, தீயை மூட்டிச் செத்த உடலை எரித்து விட்டார்களே.

பிறப்பும் இறப்பும் பெருந்துயர் அறிக

“முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்

இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்

பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆண்டினில்

கெட்டது எழுபதில் கேடு அறியீரே”                                   பாடல் 163

கருமுட்டை முந்நூறு நாட்களில் ஒரு குழந்தையாகப் பிறந்தது. பிறந்த குழந்தை உடல் அமைப்பு எதுவும் நாம் விரும்பியபடி அமைந்ததல்ல. அறிவிலிகளே! இப்படிப் பிறந்த குழந்தை பன்னிரண்டு ஆண்டுகளில் உலக இயல்புகளை உணர ஆரம்பிக்கும். பிறகு எழுபது வயதில் இறந்து படும். இவ்வளவு துன்பம் இப்பிறப்பில். (உடல் அநித்தியம் என்பதை உணரமாட்டீர்களா?.)

பகலும் இரவும் போலப் பிறப்பும் இறப்பும்

“இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்

முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர்

விடிஞ்சு இருளாவது அறியா உலகம்

படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே”                                  பாடல் 164

அகல்விளக்கு இருக்கிறது ஆனால் அதில் துடர்விட்டுக்கொண்டிருந்த ஒளி கவர்ந்து செல்லப்பட்டுவிட்டது. (உடல் இருக்க உயிர் போய்விட்டது.) உடல் அழியக்கூடியது என்பதை உணராத மூடர்கள் வெறும் பேச்சுப் பேசுவார்கள். பகலும் இரவும் (பிறப்பும் இறப்பும்) மாறி, மாறி வருவதை உணராமல்.

நந்தியைத் துதிப்பார்க்கு நரகம் இல்லை

“மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த

உடலும் உயிரும் உருவம் தொழாமல்

இடர்படர்ந் தேழா நரகிற் கிடப்பர்

குடர்பட வெம்தமர் கூப்பிடு மாறே”

இதழ் விரிந்த கொன்றை மலர்மாலை அணிந்த மாயன் படைத்த இந்த உடலின் உள்ளே, உள் ஒளிர் சோதியாக விளங்கும் இறைவனை வணங்காமல் வாழ்பவர், மிக விரும்பிய சுற்றத்தார்கள், குடல் அறுந்து விழக் கூப்பிட்டுக் கதறும் வண்ணம், வருத்தும் நரகங்கள் ஏழிலும் வதைபடுவர். பரமனைப் பணியாதவர் படு நரகில் வீழ்வர்.

மன்னருக்கும் மரணம் உண்டு

“குடையும் குதிரையும் கொற்றவாளும் கொண்டு

இடையும் அக்காலம் இருந்து நடுவே

புடையு மனிதனார் போகும் அப்போதே

அடையும் இடம்வலம் ஆருயிர் ஆமே”                                பாடல் 166

வெண்கொற்றக் குடையும், விரைந்தோடும் குதிரைப் படையும், அரசற்குரிய வீர வாளும், செங்கோலும் கைக்கொண்டு, செல்லும் காலத்திலும், நடுவிலும் கூடவும் சுற்றிலும் மனிதர் சூழ இருக்கும் காலத்திலும் கூட, உடலில் உள்ள இந்த அரிய உயிர் இடம் வலமாகச் சென்றடங்கிவிடும்.

உயிரற்ற உடலுக்கு ஏது பாராட்டும் பழியும்

“காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என்

பாற்றுளிப் பெய்யில்என் பல்லோர் பழிச்சில்என்

தோற்பையுள் நின்று தொழில்அறச் செய்தூட்டும்

கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே”                           பாடல் 167

தோலாகிய பைக்குள் இருந்து கொண்டு இந்த உடல் இயங்கக் காரணமாயிருக்கின்ற  உயிர் உடலை விட்டுப் போனபின் காகங்கள் கொத்தித் தின்றால் என்ன? கண்டவர்கள் தூற்றினால் என்ன? பால் துளிகளை மேலே தெளித்தால் என்ன? பலரும் புகழ்ந்து பேசினால்தான் என்ன  பயன்?.

Related Posts

Leave a Comment