திருமந்திரம் ( பாகம் 15 )

by Web Team
0 comment

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

                         எல்லாம் இறைவன் அருள்

“நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்

நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்

நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளால் நான் இருந்தேனே”

பாடல் 92

என் தலைவன் நந்தி. அவன் அருளாலே நான் சாத்தனூர் மாட்டிடையன் மூலன் உடலில் புகுந்தேன். பின் நந்தி அருள் துணையாலேயே சிவாகம மந்திரம் செப்பலானேன். நந்தி எம் பெருமான் அருள் வழி காட்டுதலின்படியே நான் மெய்ஞ்ஞான சித்தி பெற்றேன். இப்படியாக நான் பெற்றது உற்றது எல்லாமும் நந்தி அருளாலேயே அல்லாமல், இதில் என் செயல் ஒன்றுமில்லை.

இறைவன் இல்லாத இடமில்லை

“இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி

அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்

அருக்கனும் சோமனும் ஆர்அழல் வீச

உருக்கிய உரோமம் ஒளிவிடும் தானே”

பாடல் 93

எண்ணிப் பார்த்தால் சிவபெருமான் எண்ண முடியாத பல கோடி மந்திரங்களில் அதன் உட்பொருளாய், அந்த மந்திரங்களோடு பொருந்தி இருப்பான். சூரியனும், சந்திரனும் ஒளி வீசித் திகழுவது போல, ஆன்மாக்கள் உடலில் மூலாதாரத்தில் “ஓம்” எனும் பிரணவ சொரூபமாக உருக்கிய பொன் போல ஒளிக் கதிர் வீசித் திகழ்வான்.

சோதிச் சுடரொளி ஆனவன்

“பிதற்றுகின்றேன் என்றும் பேர்நந்தி தன்னை

இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்

முயற்றுவன் ஓங்குஒளி வண்ணன் எம்மானை

இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே”

பாடல்  94

இறைவன் திருப்பெயரை, “சிவாயநம” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓயாது நாளும் உச்சரித்துக் கொண்டே இருக்கின்றேன். அவன் திருப்பெயரையே மனதுள் இரவும், பகலும் இடைவிடாது தியானிப்பேன். விண்ணுக்கும், மண்ணுக்குமாக ஓங்கி உலகளந்து நிற்கும், சோதி வடிவான சுந்தரனை, என் தலைவனை நாடி அடையவே, நான் நாள்தோறும் முயலுவேன். இயல்பாகவே (எவரும் ஏற்றாது, தூண்டிவிடத் தேவையில்லாது) ஒளி வீசித் திகழும் அருட்சோதி ஆண்டவன் அவனேயாகும்.

அறியொணாப் பொருளானவன்

“ஆர்அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை

ஆர்அறிவார் இந்த அகலமும் நீளமும்

பேர்அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதின்

வேர் அறியாமை விளம்புகின் றேனே”

பாடல் 95

எம் இறைவன் பெருமையை யாரால் விளக்கிக் கூற முடியும்?. யார் அறிவார் அவன் ஆற்றலை?. யார் அறிவார் அவன் அழகும், அகலமும், நீளமும், உயரமும், பரப்பும்?. தனக்கென்று தனியே ஓர் பெயர் இல்லாத பெருஞ்சுடர்ச் சோதி வடிவானவன் அவன். இப்படிப்பட்ட பேராற்றலுடைய பெருந்தகையாளனை, வாக்கு மனங்கடந்த வள்ளலை நான் எவ்வாறு அறிவேன்?. என்றாலும் அவனருளாலே அவன் தாள் வணங்கி அவன் புகழ் போற்றிக் கூறத் தொடங்குகின்றேன். (“ஒரு நாமம், ஒரு உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் படி” … என்பது திருவாசகம்)

ஆடவும் பாடவும் அறியேன்

“பாடவல்லார் நெறி பாட அறிகிலேன்

ஆடவல்லார் நெறி ஆட அறிகிலேன்

நாடவல்லார் நெறி நாட அறிகிலேன்

தேடவல்லார் நெறி தேட கில்லேனே”

பாடல் 96

இசைபாடி இறைவனைப் பணிந்தவர்கள் வழியைப் பின்பற்றி, இசைபாடித் துதிக்க அறியாதவன் நான். ஆனந்தக் கூத்தாடி அருள் நெறி பரவியவர்களைப் போல, ஆடி மகிழவும் தெரியாதவன் நான். இறைவனை அடைய உரிய வழிகளைத் தேடி அவனை அடைய முயலுவார்கள் சிலர். அவர்களைப் போன்ற முயற்சியில் ஈடுபடும் பக்குவம் உடையவனும் அல்லன் நான். அவனைத் தேடி, அடையப் பல வழிகளில் முயலுவார்கள், அவனடியார்கள். அவர்களைப் போல நான் அவனைத் தேடி அடையவும் தெரியாமல் இருக்கின்றேனே. (ஆடியும், பாடியும், நாடியும், தேடியும் ஏதாவது ஒரு வழியில் முயன்றால் இறையருள் கிட்டும் எனத் திருமூலர் உணர்த்துகின்றார்)

பிரமனும் வணங்கும் பெருமான்

“மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்

இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்

பின்னை உலகம் படைத்த பிரமனும்

உன்னும் அவனை உணரலும் ஆமே”

பாடல் 97

சிவபெருமானுடைய ஐந்தெழுத்து மந்திரத்தை உள்ளத்தில் இருத்தி ஒயாது செபிப்பவர் மனத்துள்ளே ஈசன் தோன்றுவான். இப்படிப்பட்ட சிவபெருமானின் அருளாணைப்படி, படைப்புத் தொழில் புரியும் பிரமனும் கூடச் சிவனை எண்ணியே, அவனைத் தியானித்தே அதனைச் செய்கிறான்.

பக்தியோடு பரமன் அருளும் வேண்டும்

“தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை

முத்திக் கிருந்த முனிவரும் தேவரும்

ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்

பத்திமையால் இப் பயன்அறி யாரே”

பாடல் 98

கயிலயங்கிரியில் பேரின்ப வீடடைய வேண்டி வந்து நின்று தொழுத தேவர்க்கும், முனிவருக்கும் தத்துவ ஞானப் பொருளை ஈசன் உபதேசித்து அருளினான். ஒன்றாயும், வேறாகியும் தனித்தும் நின்று தாள்பணியும் அடியவர் திருக்கூட்டம், இந்த மந்திரப் பொருளறிய, தத்துவஞான சித்தி அடையப் பக்தி மட்டும் பயன் தராது, அவன் அருளும் வேண்டும். (அவன் அருள் இல்லாதார் இதன் பயன் அடையார் எனத் திருமூலர் கூறுகின்றார்)

Related Posts

Leave a Comment