திருமந்திரம் ( பாகம் 12 )

by Web Team
0 comment

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

ஞானத்தவயோகிகள் நால்வர்

“நால்வரும் நாலுதிசைக்கு என்று நாதர்கள்

நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு

நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகஎன

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே”

பாடல் 70

சனகர், சனாதனர், சனந்தனர், சன்ற்குமாரர் ஆகிய நான்கு முனிவர்கள் நான்கு திசைகளிலும் உள்ளவர்களுக்கும் தலைவரானார்கள். அவர்கள் நால்வரும் பல்வேறு பொருள் பற்றியும், தாம் பெற்ற அனுபவ ஞானத்தை ஞாலத்தவர்கள் எல்லாம் பெற வேண்டும் என்ற பெரு நோக்கில் பரம்பொருள் ஞானத்தை உணர்த்தும் ஞானத்தலைவராய்த் தவயோகச் சித்தர்களானார்கள்.

                         மூன்றொளியான மூர்த்தி

“மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்

ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்

செழுஞ்சுடர் மூன்று ஒளியாகிய தேவன்

கழிந்த பெருமையைக் காட்ட கிலானே”                                                                        பாடல் 71

பிறப்பு, இறப்பு இல்லாத இறைவன் தேவாதி மூவருக்கும், சனகாதி முனிவர் நால்வருக்கும் ஆகம உபதேசம் அருளியவன். அவன் இச்சை, கிரியை, ஞானம் எனும் மூன்றின் ஒளி வடிவாகி நிற்கின்ற தலைவன். அளவிடமுடியாத, அளப்பரிய பெருமை உடைய அவன் தன்னை அன்பர்க்கே வெளிக்காட்டுவான். அயலார்க்கு அவன் அருள் கிட்டாது. “புறத்தார்க்குச் செய்யோன்” என்பது திருவாசகம்).

நாளும் செய்க நல்லறம்

“எழுந்து நீர்பெய்யினும் எட்டுத் திசையும்

செழுந்தண் நியமங்கள் செய்மின்என்று அண்ணல்

கொழுந்தண் பவளக் குளிர் சடையோடே

அழுந்திய நால்வர்க்கு அருள் புரிந்தானே”

பாடல் 72

கடல் நீர் பொங்கி, மழைமேகம் எட்டுத் திசையும் நீர் பெருகச் செய்தாலும் நல்லறச் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள் என்று, பவளக் குன்று போல மிகுந்த குளிர் நிழலாய், விரிந்த சடையோடு கூடிய இறைவன் தன் திருவடி நாடி வந்தடைந்த சனகர், சனாதனர், சனந்தனர், சன்ற்குமாரர் என்னும் நான்கு முனிவர்களுக்கும் கட்டளை இட்டருளினான்.

சிந்தை செய்து செய்த மந்திரம்

“நந்தி இணைஅடி நான்தலை மேல்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து

அந்தி மதிபுனை அரன்அடி நாள்தொறும்

சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேன்”

பாடல் 73

ஞானாசிரியனாகிய நந்திப் பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து தொழுது, அவன் அருளியதை என் அறிவுக்குள் புகச் செய்து, மேலும் எண்ணிச் சிந்தித்து, பிறை சூடிய சிவபெருமான் திருவடிகளை அன்றாடம் மனதில் இருத்தி வழிபட்டுச் சிவமந்திரம் இதைச் சொல்கிறேன்.

சிவாகமம் பெற்றுப் பல கோடி ஆண்டு வாழ்ந்தேன்

“செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்

அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்

தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பிலி எழுகோடி யுகம் இருந்தேனே”

பாடல் 74

சிவாகமம் (இறைவன் அருளிய மறைநூல்) எனச் சொல்லப்படும் இத்தமிழ் மறையை நந்தியெம் பெருமான் திருவடித் துணையால் அருளப் பெற்ற நான், இறைவனின் ஆனந்தத் திருநடனத்தை என்னுள்ளே நானே கண்டு, ஓராயிரம் கோடி ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தேன்.

பல காலம் வாழ்ந்தது பக்தி செய்யவே

“இருந்த அக்காரணம் கேள் இந்திரனே

பொருந்திய செல்வப் புவனா பதியாம்

அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்

பரிந்துடன் வந்தனன் பத்தி யினாலே”                                  பாடல் 75

பல கோடி ஆண்டுகள் பாருலகில் நான் வாழ்ந்திருந்த காரணம் இந்திரனே! கேட்பாயாக. எல்லாவகைச் செல்வங்களும் நிறையப் பெற்ற பூவுலகங்களுக்கெல்லாம் தலைவியாம் உலக நாயகி, தவப் பெருந்தேவி உமைஅம்மையைச் சேவித்து, அத்தாயை மிக விருப்போடு பக்தி செய்து வழிபட்டு வந்ததன் பயனாலேயாம்.

முத்தமிழ் வேதம் சதாசிவம்

“சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்

மிதாசனியா திருந் தேனிற காலம்

இதாசனியா திருந்தேன் மனம் நீங்கி

உதா சனியாது உடனே உணர்ந் தோமால்”

பாடல் 76

சதாசிவம் என்னும் பரம்பொருள் தத்துவமே முத்தமிழ் ( இயல், இசை, நாடகம் எனப்பட்டாலும் இங்கு பதி, பசு, பாசம் எனக்கொள்ளலாம்) வேதமாம் தமிழ்மறை. இதனை இத்தனை நாளும் அளவுடன் உணர்ந்தவனாகவே இருந்தேன். இப்படி இருந்த நான் என் அலட்சிய மனப்பாங்கை விட்டு, விருப்போடு உள்ளம் இடமாகத் தமிழ்வேதம் உறைவிடமாகக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தே, வேதம் குடி கொள்ள மனம் கொண்டோம்.

                 ஆனந்த நடனம் அரும் பெரும் வேதம்

“மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்

நீலாங்க மேனியன் நேரிழையாள் ஒடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே”

பாடல் 77

மாலாங்கனே நான் இவ்வுலகிற்கு வந்த காரணம் நீலவண்ண நேரிழையாள் சக்தியுடன் உலகத் தோற்றத்திற்கு மூல காரணமாம் ஆனந்த நடனத்தின் அரும் பொருளாய் வந்த ஞான வேதத்தைச் சொல்வதற்காகத்தான்.

Related Posts

Leave a Comment