திருமந்திரம் ( பாகம் 6 )

by Web Team
0 comment

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

திருவடி பணிக புண்ணியம் பெறுக

“தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்

படர்ந்து நின்றான் பரிபாரகம் முற்றும்

கடந்து நின்றான் கமலம் மலர்மேலே

உடந்திருந்தான் அடிப் புண்ணியம் ஆமே”.

பாடல் 27

ஆருயிர்களைத் தொடர்ந்து நின்று காத்தருள் புரிபவன் பரம்பொருள். அவனைப் பணிந்து வணங்குங்கள். வணங்கித் துதித்து வழிபட்டால், விரிந்தகன்ற இவ்வுலகும் மற்றுமுள்ள அண்டங்கள் எல்லாமும் கடந்து நின்ற அக்கடவுள் உங்கள் உள்ளமாகிய கமல மலர் மீது வந்து அமர்வான். இப்படி அமருபவன் திருவடி தொழுதல் பெரும் புண்ணியமாகும்.

வணங்கினவர்க்கு வழித்துணை ஆவான்

“இணங்கி நின்றான் எங்குமாகி நின்றானும்

பிணங்கி நின்றான் பின்முன் ஆகிநின்றானும்

உணங்கி நின்றான் அமராபதி நாதன்

வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே”

பாடல் 28

இறைவன் எல்லாவற்றோடும் இணைந்து பொருந்தி இருப்பவன். எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன். அவன் அருளை உணராதவர்களுக்கு மாறுபட்டவனாக உணரமுடியாதவனாகக்கூட இருப்பான். உலகத் தோற்றத்திற்குப் பின்னும், முன்னும்கூடத் தான் அழியாது தனித் தலைமைப் பதியாகத் திகழ்வான். மறைந்தும் இருக்கும் அவனே தேவேந்திரனுக்குத் தலைவனாவான். அவனை வணங்கித் துதிப்பவர்க்கு வழித்துணையாக என்றும் இருப்பான்.

                      குணம் உடையார் உள்ளம் கோயிலாகும்

“காணநில் லாய்அடி யேற்குஉறவு ஆருளர்

நாண நில்லேன் உன்னைநான் தழுவிக்கொளக்

கோண நில்லாத குணத்துஅடி யார்மனத்து

ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே”

பாடல் 29

ஆண்டவனே! நான் உன்னைக் காணக் கருணை செய்யாதிருக்கின்றாயே! உன்னை விட்டால் எனக்கு உதவக் கூடியவர் யார் இருக்கின்றார்கள்? உன்னோடு இரண்டறக் கலக்க நான் தயங்கி நிற்கமாட்டேன். குறைபாடு ஒன்றுமில்லாத நற்குணம் உடைய நல்லடியார் உள்ளத்துள் ஆணி அடித்தால் போல் ஆழப் பதிந்து அங்கு வீற்றிருப்பவன் நீதானே பெருமானே. (எனவே எனக்கும் நீ அருள் செய்வாய் என்பது குறிப்பு )

வருந்தி அழைத்தால் வருவான்

“வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்

தான்நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்

ஆன்நின்று அழைக்கும் அதுபோல்என் நந்தியை

நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே”

பாடல் 30

வரண்ட நிலத்திற்கு வான் மழை அவசியம். அதை வாவென்று அழைத்தால் வராது. மழை பொழிய மேகம் கருக்க வேண்டும். இறையருளும் அப்படித்தான். ஆண்டவன் தானே வலிய வந்து அருள் புரிவான் என்று நம்பி இருப்பர். அவன் அருளைப் பெற முயலுவதில் தயக்கம் காட்டுவர். ஆண்டவன் தானே வலிய வந்தும் அருள் செய்வான். எப்போது? யார் யாருக்கெல்லாம்? பசிக்குப் பால் வேண்டிக் கன்று தாய்ப் பசுவை அம்மா என்று அழைக்குமே, அதுபோலப் பக்குவப் பட்ட ஆன்மாக்கள் ஆண்டவன் அருளைப் பெற அவனை நாடினால் அவனும் அப்படிப்பட்டவர்களுக்கு வலிய வந்து உதவுவான். நானும் என் இறைவனை இந்தப் பரிபக்குவ ஞானம் பெறவே “வா..வந்தருள் செய் “ என்று வருந்தி அழைக்கின்றேன்.

கண்ணுள் கலந்தவன்

“மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்

விண்ணகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்

பண்அகத்து இன்னிசை பாடல் உற்றானுக்கே

கண்அகத்தே நின்று காதலித் தேனே”

பாடல் 31

இறைவன் அவரவர் தன்மைக்கும் மனப் பக்குவத்திற்கும் ஏற்ப வந்தருள் செய்வான். மண்ணகத்தில் உள்ள மானிடர்க்கு மானிட உருக் கொண்டு வருவான். வானவர்க்கு வானுலகத் தேவனாய்த் திகழ்வான். இந்திரன் முதலான விண்ணுலகத்தவர்க்கு விண்ணாளும் வேந்தனாய் வீற்றிருப்பான். இரும்யைப் பொன்னாக்கும் சித்தர்களுக்கு அவனும் ஒரு சித்தனாகச் சித்தி தருவான். இசைக்கு ஏற்ற இனிய பாடலைப் போல அன்பர் உள்ளத்தே நாத வடிவாய் நிற்கும் நாயகனை நானும் என் கண்ணுக்குள்ளே வைத்துத் தவயோகம் புரிந்தேன்.

பாடிப் பரவுவோம்

“தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்

மேவு பிரான்விரிநீர் உலகு ஏழையும்

தாவு பிரான்தன்மை தான்அறிவார் இல்லை

பாவு பிரான்அருள் பாடலும் ஆமே”

பாடல் 32

தேவர்களுக்கெல்லாம் முதல்வனான சிவப் பரம்பொருளாகிய நம் இறைவன் திசை பத்திலும் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, மேல், கீழ் ) திகழ்பவன். விரிந்த கடல் சூழ்ந்த ஏழு உலகங்களையும் கடந்து நிற்பவன். இப்படிப்பட்ட அளப்பரிய ஆற்றல் படைத்த நம் தலைவனை உணர்ந்தறியக் கூடியவர் எவரும் இல்லை. எங்கும் பரந்து, விரிந்து, எல்லை கடந்து நிற்கும் இறைவன் அருளைப் பாடிப் பரவுவோமாக.

ஒன்றே பரம் பொருள் என்றே உணர்க

“பதிபல ஆயது பண்டு இவ்வுலகம்

விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்

துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்

மதிஇலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே”

பாடல் 33

இவ்வுலகம் முன்பு பல தெய்வ வழிபாடுகளை உடையதாயிருந்தது. உண்மை அறிவற்றவர்கள் அந்தப் பல தெய்வங்களை வழிபடப் பல விதிகளையும் வகுத்தனர். பலவகைத் தோத்திரங்களையும், வழிபாடுகளையும் செய்யும் இவர்கள் அறிவில்லாத மூடர்கள். இவர்கள் துன்பப் பிறப்பெடுத்துத் துயரப்படுவார்கள்

Related Posts

Leave a Comment