திருமந்திரம் ( பாகம் 7)

by Web Team
0 comment

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

ஐந்தெழுத்தை ஓதி உணர்க

“சாந்து கமழும் கவரியின் கந்தம்போல்

வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி

ஆர்ந்த சுடரன்ன ஆயிரம் நாமமும்

போந்தும் இருந்தும் புகழுகின் றேனே”

பாடல் 34

கலவைச் சாந்தோடு கலந்து மணம் வீசும் கஸ்தூரி வாசம் போல இறைவன் விண்ணவர்க்குச் சொன்ன உண்மைப் பொருள் நெறி “சிவாயநம” எனும் ஐந்தெழுத்து மந்திரம் ஓதுதல். விரிந்து படர்ந்த ஞானச் சுடர் போன்ற இந்த மந்திரத்தைச் சிவபெருமான் திருப் பெயரை ஆயிரம், ஆயிரமாக நான் தவத்தில் இருக்கும் போதும், வெளியே போகும் போதும் துதித்துத் தொழுகின்றேன்.

போற்றுமின், போற்றிப் புகழுமின்

“ஆற்றுகிலா வழி யாகும் இறைவனைப்

போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்

மேற்றிசைக்கும் கிழக்குத் திசை எட்டொடும்

ஆற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே”

பாடல் 35

இயன்ற வழியெல்லாம் எல்லாரும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, பணிந்து பரவி வழிபட வேண்டும். இப்படிச் செய்தால் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளோடு விண்ணும் (மேல் திசை), மண்ணும் (கீழ்த்திசை) எனப் பத்துத் திக்கும் பரவி நின்று ஆளுகின்ற பரம்பொருள் நம்மையும் நல்வழிப் படுத்துவான். நாம் அவன் அருளைப் பெறவும் கூடும்.

பரிசாய்ப் பெறுக பரம்பொருள் அருளை

“அப்பனை நந்தியை ஆரா அமுதினை

ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை

எப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால்

அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே”

பாடல் 36

உயிர்குலத்துக்கெல்லாம் தலைவனை, தந்தையான இறைவனை, உண்ண உண்ணத் தெவிட்டாத, இன்னும் உண்ண வேண்டும் என்ற ஆசை தீராத அமுதம் போன்றவனை, தனக்கு ஒப்பார் இல்லாத, அருளை வாரி வழங்கும் வள்ளலை, ஊழிக் காலத்தும் தான் அழியாது இருக்கின்ற மூல முதல்வனை, எந்ந வகையிலாயினும் போற்றிப் புகழ்ந்து, பணிந்து பரவுங்கள். பரவினால் அதற்குரிய பரிசை இறைவன் தருவான். அப்பரிசு அவன் கருணையை, கடாட்சத்தைப் பெறுவதுதான்.

என் உயிர்த் துணை இறைவன்

“நானும்நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்

தானும்நின்றான் தழல் தான்ஒக்கும் மேனியன்

வானின்நின்றார் மதிபோல் உடல்உள் உவந்து

ஊனில்நின்று ஆங்கே உயிர்க்கின்ற வாறே”

பாடல் 37

நானும் அன்றாடம் அகம் குழைய நின்று நந்தி எம்பெருமானை வணங்கிப் பணிந்து போற்றுகிறேன். செந்தீப் பிழம்பு போன்ற திருமேனி உடைய அவனும் எனக்குத் துணையாக என்னோடு இருந்தான். வானில் இருந்து ஒளி வீசி இருளழிக்கும் வெண்ணிலவைப் போல என் உடலைத் தன் இருப்பிடமாகக் கொள்ள விரும்பி வந்து, என் ஊனில் உணர்வில் கலந்து, உயிர்ப்படையச் செய்கிற பரம்பொருள் என் மனத்திருளைப் போக்கிச் சிவ சிந்தனை உண்டாகச் செய்கிறது.

                 மாதவம் செய்தவன் நான்

“பிதற்று ஒழியேன் பெரியான் அரியானைப்

பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்

பிதற்று ஒழியேன் எங்கள் பேர்நந்தி தன்னைப்

பிதற்று ஒழியேன் பெருமைத்தவன் நானே”

பாடல் 38

இறைவன் மிகப் பெரியவன், அறிதற்கு அரியவன், அருமை ஆனவன் அவனைப் போற்றித் துதிக்க நான் மறக்கமாட்டேன். போற்றத் தவற மாட்டேன். பிறப்பு இறப்பு இல்லாஉருவத்தானைப் போற்றாமல் இருக்க மாட்டேன். நந்தி எனும் பெயர் உடைய எம் நாதனைப் போற்ற மறக்காத நான் பெரும் தவம் செய்தவன் ஆவேன் (திருமூலர் இறைவன் மேல் காதல் கொண்டு சித்தம் அவன் நினைவாக இருந்தவர். எனவே இறைவனைப் போற்றித் தொழுவதையும் பிதற்றல் என்கிறார். சித்தம் தடுமாறியவர்களும், காதல் வசப்பட்டவர்களும் நிலை தடுமாறி உளறுவதை பிதற்றுதல் என்பர்)

                     வாழ்த்துபவர் வசமாவான் ஈசன்

“வாழ்த்த வல்லார்மனத்து உள்ளுறை சோதியைத்

தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை

ஏத்தியும் எம்பெருமான் என்று இறைஞ்சியும்

ஆத்தம்செய்து ஈசன் அருள் பெறலாமே”

பாடல் 39

தன்னை வாழ்த்தி வணங்கித் தொழுபவர்கள் மனத்தின் உள் இருக்கும் சோதி வடிவானவன் இறைவன். தூயவனான அவன் அன்பர் அன்பில் மகிழ்ந்து, அவர் உள்ளமே கோவிலாகக் கொண்டு எழுந்தருளி யிருப்பவன். இப்படிப்பட்ட தேவாதி தேவனைப் போற்றியும், பெருமானே என்று அகம் குழைந்து கொஞ்சிக் கெஞ்சியும், விரும்பி அன்பு பாராட்டுபவர்கள் இறைவன் அருளைப் பெறலாம்.

                    திருவடி தொழுவாரைத் தேடி வருவான்

“குறைந்தடைந்து ஈசன் குரைகழல் நாடும்

நிறைந்தடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்

மறைஞ்சுஅடம் செய்யாது வாழ்த்த வல்லார்க்குப்

புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே”

பாடல் 40

மிகத் தாழ்ந்து, பணிந்து, பூசைக்குரிய, பெருமைமிகு இறைவன் திருவடியை வணங்குங்கள். ஒளி நிறைந்த அடர்த்தியான அவன் தோற்றம் (திருவடி) செம்பொன் போல் ஒளி வீசும். மனத்தில் வஞ்சனை இல்லாது (உள்ளத்தில் கள்ளம் இல்லாது) அவனை வாழ்த்தி வணங்குபவர் உடலைப் புறஞ்செய்யாது (கை விடாது) அதனுள் தங்கி இருப்பான். (அவனை நம்பினவரை அவன் தன்னை விட்டு அகல விட மாட்டான்)

Related Posts

Leave a Comment