திருமந்திரம் ( பாகம் 5 )

by Web Team
0 comment

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

                                                             ஓசை ஒலியானவன்

“முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த

அடிகள் உறையும் அறநெறி நாடில்

இடியும் முழக்கமும் ஈசர் உருவம்

கடிமலர்க் குன்றம் மலைஅது தானே.”

பாடல் 20

முடிவாகிய இறப்பையும், தோற்றமாகிய பிறப்பையும் உயிர்களுக்குத் தந்து உதவியவனான, அடியவர்க்கு அடியவனான பரம்பொருள் இருக்கும் இடம் எது என்று ஆராய்ந்து பார்த்தால் அவன் இருக்கிமிடம் வாசமலர் பூக்கும் திருக்கயிலாய மலையே ஆகும். அன்பர் உள்ளத்தில் கோயில் கொண்டவன். சுடலையில் உறைபவன். எனினும் அவன் ஓசை ஒலியானவன். வெள்ளிப் பனிமலையே அவன் வடிவம்.

                         பாடிப் பரவுக, பரமன் அருள் பெற

“வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்

ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்

கானக் களிறு கதறப் பிளந்தஎம்

கோனைப் புகழுமின் கூடலும் ஆமே”.

பாடல் 21

வான் பொழியும் மாமழை போல அருள் புரிபவன் சிவப்பரம்பொருள். திருமால், பிரமன் மற்றுமுள்ள தேவர்களுக்கெல்லாம் இழிந்த பிறவி இல்லாத அமரத்துவம் தந்தவன் அவன். அவனே தாருகா வனத்து முனிவர்கள் ஆணவம் அழிக்க, அவர்கள் வேள்வியில் தோன்றிய யானை உடலைப் பிளந்து, கரி உரி போர்த்த மூர்த்தமாகக் காட்சி தந்தவன். இப்படிப்பட்ட எம் தலைவனைப் பாடிப்பரவிப் பணிந்து போற்றினால் அவனருள் பெறலாம். அவனோடு இரண்டறக் கலக்கலாம்.

அன்பர்க்கு உதவும் நண்பன் அவன்

“மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்

நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்

எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்

பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே”.

பாடல் 22

விரும்பித் தொழும் அடியவர் மனத்துள்ளே தோன்றும் மாயன். அவர்களின் உள்ளத்தை நாடி குடியிருக்கும் இடமாக்கிக் கொள்பவன். நினைந்தறியத் தக்க நிர்மலன் அவன். என்றாலும் அவனை மாயை வசப்பட்ட மனிதர்கள் நினைப்பதில்லை. மாறாக இறையருள் எனக்கு இல்லை, என்பால் இறைவனுக்குக் கருணை பிறக்கவில்லை என்று பேசுவார்கள். ஆனால் இறைவனோ பிறவித்துயரிலிருந்து தப்பிப் பிழைக்க நினைப்பவர்களுக்குத் துணையாக, அவர்கள் பக்கமிருந்து அவர்களைக் காத்தருளுவான் என்பதே உண்மை.

                        எல்லாம் வல்ல எம்பிரான்

“வல்லவன் வன்னிக்கு இறைஇடை வாரண

நில்என நிற்பித்த நீதிஉள் ஈசனை

இல்என வேண்டா இறையவர் தம்முதல்

அல்லும் பகலும் அருளுகின் றானே”.

பாடல் 23

எல்லாம் வல்ல ஆற்றலாளன் இறைவன். தீக்கடவுளை நடுக் கடலில் நிறுத்திக் கடல் புரண்டு கரை கடக்காதவாறு “நில்” எனச் சொல்லிக் கடல் கரைக்குள்ளாக நிற்கக் கட்டளை இட்ட நீதிமான் கடவுள். இத்தகைய இறைவனை இல்லை எனச் சொல்லாதீர். தேவர் முதலான எல்லா உயிர்களையும் இரவும், பகலும் காத்தருள் புரிபவன் நம் ஈசனே ஆவான்.

சேர்த்த பொருளனைத்தும் சிவன் சேவடிக்கே

“போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி

தேற்றுமின் என்றும் சிவனடிக்கே செல்வம்

ஆற்றியது என்று மயலுற்ற சிந்தையை

மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே”.

பாடல் 24

துதித்து போற்றிப் புகழ்ந்து இசைபாடிக் குறையில்லா நிறை உடைய தூயவனான இறைவன் திருவடியைத் தினந்தோறும் மறவாது மனத்தில் இருத்தித் துதிப்பதில் உறுதியாக இருங்கள். ஈட்டிய செல்வம் எல்லாம் சிவன் சேவைக்கே உரியது என்று நினையுங்கள். தாம் ஈட்டிய செல்வம் எல்லாம் தம் உடமை, தம் உரிமை என்று நினைத்து மயங்கும் மன மயக்கத்தை விட்டொழித்து நிற்பவர்களை இறைவன் நெருங்கி வந்து நல்லருள் புரிவான்.

பிறவா இறவாப் பெருமான்

“பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்

இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்

துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்

மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே”.

பாடல் 25

இறைவன் பிறவித் துயர் இல்லாதவன் அவன் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. விரிந்த சடை முடியோடு கூடியவன். அளவில்லாத அன்புடையவன். எல்லோருக்கும் இன்பத்தை வாரி வழங்கும் அளவற்ற கருணை மனம் கொண்ட அருளாளன். நம்பி அடைந்த ஆன்மாக்களை கைவிட்டுவிடாதவன். இப்படிப்பட்ட பெருமானைத் தொழுது துதியுங்கள். துதித்துப் பணிந்தால் அவன் உங்களை மறவான். இதனால் நீங்கள் ஞானம் அடையப் பெறுவீர்கள்.

அறிவுக்கறிவானவன், அறிவில் உறைபவன்

“சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்து

அந்தமில் ஈசன் அருள்நமக் கேஎன்று

நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்

புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே”.

பாடல் 26

சாயங்காலப் பொழுது. பகலும் இரவும் சந்திக்கும் மாலை நேரம். மேற்குவானம் சூரியன் மறையச் சிகப்பாக இருக்கும். இப்படிப்பட்ட சிவந்த நிறமுடைய, செந்தாமரை மலர் போலும் சிவந்த அழகிய ஒளி பொருந்திய திருமுகம் உடைய, எல்லையும் முடிவும் இல்லாத ஈசன் அருள் நமக்கே என்று நந்தியெம் பெருமானை நாளும் வணங்கித் துதிப்பவர்கள் அறிவில் கலந்து அருள் புரிகிறான் இறைவன்.

Related Posts

Leave a Comment