திருமந்திரம் ( பாகம் 3 )

by Web Team
0 comment

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

                                                                  சிவனே எல்லாம்

“அவனை ஒழிய அமரரும் இல்லை

அவன்அன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை

அவன்அன்றி மூவரால் ஆவதுஒன் றில்லை

அவன்அன்றி ஊர்புகு மாறு அறியேனே”.                             பாடல் 6

சிவன் இல்லாமல் தேவர்கள் இல்லை. சிவனருள் இல்லாமல் செய்யப்படும் மேலான தவம் எதுவும் இல்லை. சிவன் இல்லாமல் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரால் எதுவும் செய்ய இயலாது. சிவன் அருள் இல்லாமல் விண்ணுலக வாழ்வடையும் வழியை நான் உட்பட எவராலும் அறிய முடியாது.

மூவர்க்கும் தேவன்

முன்னைஒப் பாய்உள்ள மூவர்க்கு மூத்தவன்

தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்

தன்னைஅப் பாஎனில் அப்பனு மாய்உளன்

பொன்னைஒப் பாகின்ற போதுஅகத் தானே”.                             பாடல் 7

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலும் புரியும் மூவருக்கும் சிவனே  தலையாயவன். இவன் தனக்கு உவமை சொல்ல இயலாத தனிப்பெரும் தலைவனானவன். பெற்ற தந்தையைப் போல உயிர்களுக்கு அருள் பாலிப்பவனாகவும் உள்ள இவனே, பொன்னைப் போலப் போற்றத்தக்க பெருமை உடையவன். என் உள்ளத் தாமரையில் வீற்றிருக்கின்ற இறைவன் இவன்.

தாயினும் இனியன்

“தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருள்அறி வார்இல்லை

சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லபின் தாழ்சடை யோனே”.                               பாடல் 8

நெருப்பை விடச் சூடானவன். குளிர்ந்த நீரிலும் குளிர்ச்சி உடையவன். என்றாலும் இப்படிப்பட்ட இறைவன் திருவருட் கருணையை முழுதுமாக அறிந்தவர் எவரும் இல்லை. எவராலும் முற்றவும் ஓதி உணர்தற்கரிய பரம்பொருள், குழந்தையை விடக் குதூகலம் தருபவன் கொண்டாடத் தக்கவன். விரும்பித் தொழும் அன்பர் கைக்கெட்டும் நெருக்கமாக, நேசமாக இருக்கும் அப்பரம் பொருள் தாயினும் இனிய தயவுடையது. தாழ்சடை தாங்கும் தயாபரன் அவனே மூல முதலாம் முழு முதல் கடவுள்.

                       எல்லோரும் தொழும் இறைவன்

“பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை என்னப்

பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி

என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்

தன்னால் தொழப்படு வார்இல்லை தானே.”                              பாடல் 9

பொன்னால் செய்தது போல ஒளி வீசித் திகழும் தங்க நிறத் தாழ்சடை பின் கழுத்தின் கீழாக விழங்க இருக்கும் இறைவன் நந்திஎம்பெருமான். அவனே நான் பணிந்து தொழும் எம் கடவுள். நான் மட்டுமல்ல எல்லோரும் வணங்கி வழிபடும் கடவுளும் அவனே. இவன் எல்லோராலும் வணங்கத்தக்கவனாக இருக்கிறானே அன்றி இவன் வணங்கும் இறைவன் எவரும் இல்லை.

                     விண்ணும் மண்ணும் சிவபெருமானே

“தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்

தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்

தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்

தானே தடவரை தண்கடல் ஆமே.”                                     பாடல் 10

“இறைவன் இவனே, விரிந்தகன்ற மண்ணகமாகவும், உயர்ந்து பரந்த வானகமாகவும் இருக்கின்றான். சுட்டெரிக்கும் அக்கினியாகத் திகழும் இவனே சூரியனாகவும், சந்திரனாகவும் உள்ளான். மழையாய்ப் பொழிந்து உலகின் வாட்டத்தைப் போக்கும் தாயாக இருந்து தண்ணருள் புரியும் இவனே மலையாகவும், மா கடலாகவும் உள்ளான்.” அதாவது சூரியன், சந்திரன், பஞ்சபூதங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) எல்லாம் சிவபெருமானே.

எங்கும் நிறைந்தவன் எல்லாம் ஆனவன்

“அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்

இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை

முயலும் முயலில் முடிவுமற்று ஆங்கே

பெயலும் மழைமுகில் பேர்நந்தி தானே”                               பாடல் 11

பக்கத்திலும், சுற்றிலும் அதாவது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற எம் மூல முதல்வனான இறைவனைப் போன்ற ஒரு கடவுள் வேறு எதுவும் இல்லை. அவனை அடைய, அவன் அருளைப் பெற ஆன்மாக்கள் முயலும் முயற்சிகளிலும், அதன் முடிவிலும், மற்றும் அதன் பயன்களிலும் அவனே பருவத்தில் பெய்து பயன் தரும் மழை மேகம் போல் உள்ளான். இவனே நந்தி எம்பெருமான்.

                                      விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் இவனே தெய்வம்

“கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்

எண்இலி தேவர் இறந்தார் எனப்பலர்

மண்உறு வார்களும் வான்உறு வார்களும்

அண்ணல் இவன்அன்று அறியகில் லார்களே”                           பாடல் 12

நெற்றியில் கண்ணுடைய சிவபெருமான் உயிர்களுக்கெல்லாம் தன் அருட்கருணையை அள்ளித் தர விருப்பத்தோடு காத்திருக்கின்றான். ஆனால் அவனுடைய இந்த அளப்பரும் கருணையை உணராமல் பல தேவர்கள் அழிந்து போயினர். காரணம் மண்ணில் இருப்பவர்களுக்கும், தேவலோகத்தில் இருப்பவர்களுக்கும் இவனே மேலான தெய்வம் என்பதை அறியாமல் போனதாலாகும்.

 

Related Posts

Leave a Comment