திருமந்திரம் ( பாகம் 1 )

by Web Team
0 comment

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

ஒரு நூலில் கூறியுள்ள விடையத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன்பாக அந்நூலைப் பற்றியும் அதை ஆக்கியவரைப் பற்றியும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானதொன்றாகும். திருமந்திரம் நூலைப்பற்றிப் பார்ப்போமானால் திருமந்திரம் வாழ்க்கைக்கு வழி காட்டும் நூல். இந்நூல் ஓர் வாழ்வியல் தத்துவ நூல். திருமந்திரத்திற்கு ஒரு மந்திரம் இல்லை என்பது முன்னோர் வாக்கு. திருமந்திரம் அன்பே சிவம் (இறைவன்) என்னும் தத்துவத்தின் மூலம் எமது அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளை மிகவும் சிறப்பாக விளக்குகிறது.

உலகில் உள்ள சகல உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தக் கற்றுத் தருகிறது. ஆன்மீக வாழ்க்கைக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் மூலம் இறைவனைச் சேர வழி காட்டுகிறது. எமது உடலை முறையாகப் பேணுவதற்குப் பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), யோகாப்பியாசம், வைத்தியம் உட்பட பல விடையங்களைக் கூறுகின்றது. சைவம், தமிழ் ஆகிய இரு பெரும் துறைகளில் தலைசிறந்த மும்மணிகள் எனக் கூறப்படும் நூல்களுள் திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றுடன் திருமந்திரமும் ஒன்றாகும். சைவசமய நூல்களில் மந்திரம் எனக் கூறப்படும் ஒரே நூல் திருமந்திரமாகும். இந்நூல் சைவசித்தாந்த சாத்திரமாகவும், இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திரமாகவும் போற்றப்படுகின்றது. இந்நூல் தமிழ் மூவாயிரம், திருமந்திர மாலை (சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தில் “ஞானம் முதல் நான்கும் அவர் நல் திருமந்திரமாலை, தமிழ் மூவாயிரம் சாத்தி” எனப் பாடியுள்ளார்)  எனவும் அழைக்கப்படுகிறது. இந்நூல் பத்தாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது. இந்நூலில் வரும் அனேக பாடல்களில் வரும் சிவம் என்னும் சொல்லுக்கு இறைவன் என்னும் கருத்தைக் கொள்வோமானால் இந்நூல் எல்லா மதத்திற்கும் பொது நூலாக அமைவதைக் காணலாம். சங்ககாலப் புலவரும், முருகப்பெருமானின் அருள் பெற்றவரும், முருகப்பெருமானை நேரில்த் தரிசித்தவருமான ஔவையார்

“தேவர் குறளும் திருநாள் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகம் என்று உணர்.”

எனப் பாடியுள்ளார். இதன் பொருள்   “திருக்குறள், நான்கு வேதங்கள், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் படைப்புக்கள், அகத்தியரின் நூல், திருஞானக்கோவை, திருவாசகம் ஆகிய அனைத்துமே திருமூலர் கூறும் ஒரு வாசகத்திற்கு இணை.” என்பதாகும். இக்கூற்றிற்கு மேலாகத் திருமந்திரத்தைப் பற்றிக் கூறவேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன்.

திருமந்திரத்தில் காப்புச்செய்யுளான ”ஐந்துகரத்தனை”, கடைசிச் செய்யுள்களான “மூலன் உரை” , “வாழ்கவே வாழ்க” ஆகிய மூன்றும் (திருமூலரால் பாடப்படவில்லை எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்) சேர்த்து மொத்தம் 3048 பாடல்கள் உள்ளன. இவற்றில் முதல் 113 பாடல்கள் காப்புச் செய்யுள், சிறப்புப் பாயிரம் மற்றும் இறைவணக்கம் முதலியனவும், 2935 பாடல்கள் ஒன்பது தந்திரங்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. ( தந்திரம் – பக்குவம் என்பது பொருள் ).

திருமந்திரத்தை அருளிய திருமூல நாயனாரைப் பற்றிப் பார்ப்போமானால் அவர் அட்டமா சித்திகள் பெற்ற தவயோகி. அவரின் இயற்பெயர் சுந்தரநாதன். திருமந்திரம் முந்நூறு என்னும் நூலில் சிறப்பாயிரத்தில் “மந்திரம் கொண்டு எனத்தொடங்கும் பாடலில் சுந்தரநாதன் சொல்லிய மந்திரம் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் கி.பி. 4 ஆம் ,5 ஆம் நூற்றாண்டில் மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக யோக நிலையிலிருந்து ஆண்டுக்கொருமுறை விழித்து ஒவ்வொரு பாட்டாக  தமிழில் திருமந்திரத்தைப் பாடியதாக வரலாறு கூறுகின்றது. (திருமந்திரம் “செப்பும் சிவாகமம்…” எனத்தொடங்கும் பாடல் எண் 74 இலிலும், “இருந்தேன் இக்காயத்தே ..” எனத்தொடங்கும் பாடல் எண் 80 இலும் திருமூலநாயனாரே இதை உறுதி செய்கின்றார்) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” என திருத்தொண்டர் தொகையிலும், சேக்கிழார் பெருமானான் திருத்தொண்டர் புராணத்தில் “கயிலாயத்து ஒரு சித்தர் பொதியில் சேர்வார் காவிரி சூழ் சாத்தனூர் கருதும் மூலன்” எனவும் போற்றியுள்ளார்கள்.

சிவனிடம் மாணவராக இருந்த நந்தியெம்பெருமானிடம் உபதேசம் பெற்ற சுந்தரர் என்னும் யோகி கைலாயத்தில் இருந்து அகத்திய முனிவரைக் காண்பதற்காக தென்நாடு வந்தார். வரும் வழியில் சிதம்பரத்தில் ஆனந்தக்கூத்தையும், திருவாவடுதுறையில் சிவனையும் வணங்கியபின்பு வழியில் மூலன் என்னும் மாடு மேய்ப்பவன் பாம்பு தீண்டி இறந்து கிடக்க அவன் மேய்த்த பசுக்கள் அவன் உடலைச் சூழ்ந்து நின்று கதறிக்கொண்டிருப்பதைக் கண்டார். மாடுகளின் துயரத்தைப் போக்க எண்ணிய யோகி தனது யோக சக்தியால் தனது உடம்பைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு இறந்து கிடந்த மூலனின் உடலில்ப் புகுந்தார்.  மூலன் உயிர்பெற்று எழுந்ததால் பசுக்கள் மகிழ்ச்சியடைந்தன. மாலை நேரமானதும் பசுக்கள் வீடு நோக்கிப் புறப்பட்டன. பசுக்களைப் பின் தொடர்ந்த மூலன் உடலில் இருந்த யோகியும் மாடுகள் தாங்கள் சேருமிடம் புகுந்தவுடன் தான் வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கினார்.

பசுக்களின் குரல்கேட்டு மூலனின் மனைவி வீட்டிற்கு வெளியில் வந்து மூலனை வரவேற்றாள். நிலைமையைப் புரிந்து கொண்ட யோகி தமக்கும் உமக்கும் ஒரு தொடர்பும் இல்லை என மூலன் மனைவியிடம் கூறிவிட்டு தனது பயணத்தைத் தொடரமுற்பட்டார். மூலன் மனைவி சாத்தனூர் மக்களை அழைத்து விடையத்தைக் கூறினாள். ஊர் மக்கள் யோகியின் செயல்கள் எதுவும் மூலனுடையதாக இல்லை உடல் உரு மட்டுமே மூலன் மற்றும்படி இவர் மூலன் அல்ல என முடிவு செய்தனர். மூலனின் மனைவியிடம் இவர் எனி உன் கணவர் அல்லர் அவர் வழியே விடுமாறு கூறினர். மூலன் மனைவி வருத்தப்பட்டு அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது இருந்து விட்டாள். பயணத்தைத் தொடர்ந்த துறவி மீண்டும் தன் உடலில் புகுந்து தான் முன்பு இருந்த நிலைக்குத் திரும்ப நினைத்தார். ஆனால் அவர் உடலை விட்ட இடத்தில் அவரின் உடல் கிடைக்கவில்லை. இறைவன் தான் அருளிய ஆகமப் பொருளை தமிழில் வழங்கவே இவ்வாறு செய்தான் என ஞானத்தால் உணர்ந்த யோகி திருவாவடுதுறை சிவன் கோவிலின் மேற்குப் பக்கம்  உள்ள அரசமரத்தின் கீழ் யோக நிட்டையில் அமர்ந்திருந்தார். அன்றுமுதல் அவர் திருமூலர் என்று அழைக்கப்பட்டார்.  இக்கதையை திருத்தொண்டர்  திரு அந்தாதியில் நம்பி ஆண்டார் நம்பிகள் கூறிய “குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பை புக்கு” என்னும் வரிகளிலிருந்து உறுதி செய்யக்கூடியதாக உள்ளது.

திருவாவடுதுறையில் அருள்மிகு கோமுத்தீசுவரர் திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள திருமூலநாயனாரின் ஜீவசமாதிக்கு மேல்  திருமூலநாயனாரின் திருவுருவம் அமைக்கப்பட்டு, ஆகம விதிப்படி அமையப் பெற்ற திருக்கோவில் இன்றும் உள்ளது. திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தால் இவ்வாலயத்தில் திருமூலரின் குருபூசைத் திருநாள் ஐப்பசி மாச அசுவதியில் நடத்துவதுடன் பல திருமந்திர, திருமூலநாயனர் பற்றிய விழாக்களும் நடாத்தப்பட்டுவருகின்றன.

இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் பாடல் எண்கள் கவிஞர்கோ ஞா. மாணிக்கவாசகன் அவர்களால் உரை எழுதப்பட்ட நூலில் உள்ளபடி எடுக்கப்பட்டுள்ளன. வேறு சில புத்தகங்களில் இவ் எண்கள் மாறுபட்டுள்ளன.

…….தொடரும்

Related Posts

Leave a Comment