மக்களின் பணத்தின் மூலமே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது – ஜனாதிபதி

by Author
71 views

மக்கள் வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தின் மூலமே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனவே வினைத்திறனானதும் முறையானதுமான அரச சேவையின் மூலம் தமக்கு ஊதியம் வழங்கும் மக்களுக்கு நியாயமானதொரு சேவையை பெற்றுக்கொடுப்பது அரச ஊழியர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் தொழிலை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த பட்டதாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அலரிமாளிகையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

அங்கு கருத்து வெளியிடும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரச, பகுதியளவு அரச மற்றும் திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்க்கும் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளது. தொழில்வாய்ப்புகளை பெறுவோருக்கு தலைமைத்துவம் மற்றும் அரச சேவை பற்றிய முறையான பயிற்சியும் விளக்கமும் வழங்கப்படவுள்ளது. மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரச சேவையொன்றையும் அரச ஊழியர்களையும் உருவாக்குவதே எனது நோக்கமாகும்.

பயிற்றப்படாத ஊழியர்கள் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய பிரிவினராக உள்ளனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒரு பலமான அடிப்படையுடன் கைத்தொழில் துறை நாட்டில் கட்டியெழுப்பப்படவில்லை.

நாட்டின் எதிர்கால பயணத்துக்கு உள்ள பெரும் பலம் மனிதவளமாகும். எனவே நாட்டில் கற்ற இளைஞர், யுவதிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து, அவர்களை பொருளாதார அபிவிருத்திக்கு பங்காளர்களாக ஆக்குவது முக்கிய தேவையாகும்.

ஒரு சிறு பிரிவினரால் ஏற்படும் தவறுகளின் காரணமாக முழு அரச சேவையின் மீதும் குற்றம் சுமத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

அன்றாடம் இடம்பெறும் தவறுகள் முழு அரச சேவைக்கும் இழுக்கை ஏற்படுத்தும். மக்கள் வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தின் மூலமே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. வினைத்திறனானதும் முறையானதுமான அரச சேவையின் மூலம் தமக்கு ஊதியம் வழங்கும் மக்களுக்கு நியாயமானதொரு சேவையை பெற்றுக்கொடுப்பது அரச ஊழியர்களின் பொறுப்பாகும்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட வசதிகளை விரிவுபடுத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைய வேண்டும். இதற்காக அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy