சீனாவின் 5G ஐ பிரிட்டன் பயன்படுத்துவது முட்டாள்தனம் : அமெரிக்கா எச்சரிக்கை

by Author
108 views

பிரித்தானியாவின் 5G தொழில்நுட்பத்தில் ஹுவாவி (Huawei) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது முட்டாள்தனமானது என்று அமெரிக்கா, பிரித்தானிய அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

சீன நிறுவனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து அமெரிக்கக்குழு ஒன்று பிரித்தானியாவுக்கு புதிய ஆதாரங்களை வழங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயன்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

பிரித்தானிய வலையமைப்பில் ஹுவாவியின் நேரடி இணைப்பற்ற (non-core) பகுதிகளை அனுமதிக்கலாமா என்பது குறித்த முடிவு இந்த மாதம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கத் தேசிய பாதுகாப்பின் துணை ஆலோசகர் மாற் பொற்ரிங்கர் தலைமையிலான தூதுக்குழு, நேற்றுத் திங்கட்கிழமை லண்டனில் அமைச்சர்களைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து இல்லாமல் ஹுவாவியின் 5G உட்கட்டமைப்பினைப் பயன்படுத்த முடியும் என்று பிரித்தானிய உளவுத்துறையின் தொழில்நுட்ப மதிப்பீட்டை கேள்விக்குள்ளாக்கி அமெரிக்க மூத்த அதிகாரிகள் தொழில்நுட்ப ஆதாரங்களைக் கொடுத்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரத்தின் உள்ளடக்கம் குறித்து கருத்துத் தெரிவிக்க அமெரிக்க வட்டாரங்கள் மறுத்துவிட்டன.

5G வலையமைப்பில் பிரித்தானிய அரசு தனது முடிவை எடுக்கத் தயாராகி வரும் நிலையில், அமெரிக்கக் குழுவின் வருகை ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிர பரப்புரை முயற்சியின் சமீபத்திய வடிவமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, தேசிய பாதுகாப்புத் தொடர்பான விடயங்களைச் சுட்டிக்காட்டி, ஹுவாவி மற்றும் அதனோடு தொடர்புடைய 68 நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களை விற்பதற்கு அமெரிக்கா தடைவிதித்தது.

ஹுவாவியின் எந்தவொரு பயன்பாடும் உளவுத்துறைத் தகவல்களை பகிர்வதற்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா ஏற்கனேவே எச்சரித்திருந்தது.

எனினும், உளவுத்துறைத் தகவல்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று பிரித்தானிய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

MI5 இன் தலைவர் ஆன்ட்ரூ பார்க்கர் (Andrew Parker) பைனான்சியல் ரைம்ஸிடம் தெரிவிக்கையில்; பிரித்தானியா ஹுவாவியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் அமெரிக்காவுடனான உளவுத்துறை பகிர்வு பாதிக்கப்படும் என்று நினைக்க எந்தக் காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஹுவாவி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; இது ஒரு தனியார் நிறுவனம், 3G, 4G மற்றும் புரோட்பான்ட் உபகரணங்களை 15 ஆண்டுகளாக பிரித்தானியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. எங்களது தொழில்நுட்பம் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தாது என்பது குறித்து பிரிட்டிஷ் நிபுணர்கள் தெளிவாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கென்சர்வேற்றிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பொப் சீலி (Bob Seely) தெரிவிக்கையில்; ஹுவாவியின் அனைத்து நோக்கங்களுக்கும் சீன அரசின் ஒரு பகுதியாகும். எனவே அதனுடனான தொழில்நுட்ப ஒப்பந்தம் பிரித்தானியாவின் வலையமைப்பை பெய்ஜிங் அணுக அனுமதிக்கும் செயல் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பிரித்தானியாவில் 5G உட்கட்டமைப்பின் பொருத்தப்பாடு குறித்து உடனடி விசாரணையை ஆரம்பிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவுக்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; பிரித்தானியத் தொலைத்தொடர்பு வலையமைப்புக்களின் பாதுகாப்பும் நெகிழ்வுத்தன்மையும் மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிக ஆபத்து நிறைந்த நிறுவனங்கள் மீது சரியான நேரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நன்றி bbc.co.uk

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy