நவராத்திரி நாட்களில் என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது..?

by Column Editor
0 comment

இந்த ஆண்டு நவராத்திரி நாட்களில் நீங்கள் எதையெல்லாம் செய்யலாம் மற்றும் செய்யவே கூடாது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்…

உலகை ஆளும் சிவபெருமானை வழிபடுவதற்கு ஒரு ராத்திரி தான், ஆனால் அன்னை ஆதிபராசக்திக்கு ஒன்பது இரவுகள் கோலாகலமாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அந்த அளவுக்கு நவராத்திரி சிறப்பு வாய்ந்தது. நம் நாட்டில் இந்த சமூகம் தான் அல்லது இந்த மாநிலத்தவர்தான் நவராத்திரி கொண்டாடுவார்கள் என்ற வரையறை கிடையாது. நாடு முழுவதுமே ஒவ்வொரு மாநிலத்தவரும் அவரவரின் வழக்கத்திற்கு ஏற்ப நவராத்திரியை மிக விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

ஆடல், பாடல், நடனம் என்று வட மாநிலங்களிலும், கிழக்கு மாநிலங்களிலும் நவராத்திரி கொண்டாடப்படும் அதே நேரத்தில், தமிழ்நாட்டில் கொலு வைத்து சிறப்பிக்கப்படும். தினமும் கொலு வைக்கும் வீடுகளுக்கு தாம்பூலம் பெற்று வருவது, தாம்பூலம் பெறுவதற்கு சிறுமிகளையும் பெண்களையும் அழைத்து, அவரவர் வசதிக்கு ஏற்ப தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் பெறுவது, தினமும் ஒரு அலங்காரம், வழிபாடு, பூஜை என்று ஒன்பது நாட்களும் தமிழ்நாட்டிலும் நவராத்திரி களைகட்டும். இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று தொடங்க இருக்கிறது. நவராத்திரியில் பலருக்கும் கொலு வைக்கும் பழக்கமும் ஒரு சில வீடுகளில் கொலு வைக்காமலேயே நவராத்திரி கொண்டாடும் வழக்கமும் இருந்து வருகிறது. எது எப்படி இருந்தாலும் நவராத்திரி கொண்டாடுபவர்கள் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும் மற்றும் ஒரு சில விஷயங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இந்த ஆண்டு நவராத்திரி நாட்களில் நீங்கள் எதையெல்லாம் செய்யலாம் மற்றும் செய்யவே கூடாது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

நவராத்திரிக்கு கொலு வைப்பவர்களின் கவனத்திற்கு:

கொலு வைப்பவர்கள் காலை மாலை என்று இரண்டு வேளையும் விளக்கேற்றி தவறாமல் நெய்வேத்தியம் செய்து வணங்க வேண்டும். எந்த நாள் எந்த எந்த உணவுகளை செய்து படைக்கலாம் என்பதற்கு ஒரு தனி பட்டியலே இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல தவறாமல் விளக்கேற்றி கற்பூரம் காண்பிக்க வேண்டும். கொலு வைக்காதவர்களும் இதை பின்பற்றலாம். அம்பாளின் திருவுருவப்படங்களையே பூஜை செய்து தினமும் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.

உலகத்தையே அச்சுறுத்தி வந்த அரக்கனை அழித்த பராசக்தியின் வெற்றியைக் கொண்டாடும் திருவிழா தான் நவராத்திரி. எனவே இது பெண்களுக்கான பண்டிகை ஆகும். இந்த நாட்களில் பெண்களுக்கு அவமரியாதை செய்யும் படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களை சுற்றி இருக்கும் பெண்கள், எந்த வயதாக இருந்தாலும் சரி, அவர் உங்களுக்கு எந்த உறவாக இருந்தாலும் சரி அல்லது முன்பின் அறியாதவராக இருந்தாலும் சரி, அவமரியாதை செய்யும் படி நடந்து கொள்ளக்கூடாது. பெண்களுக்கு மரியாதை அளிப்பதை கற்றுக்கொள்ள வேண்டும் அதன்படி நடக்க வேண்டும்.

எவ்வளவு தான் பூஜை புனஸ்காரம் செய்து ஒன்பது நாட்களுக்கான பூஜை விதிமுறைகளை சாசனத்தை முறையாக பின்பற்றி வந்தாலும், வீடு அமைதியாக இருக்க வேண்டும். எனவே தேவையில்லாத சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தினமும் சிறுமிகள் அல்லது பெண்களை வீட்டிற்கு வரவழைத்து, உங்களால் இயன்ற அளவுக்கு தாம்பூலம் வைத்து கொடுத்து அவர்களின் ஆசி பெறலாம். ஒன்பது நாட்களில் வெள்ளிக்கிழமையன்று பெண்களை அழைத்து விருந்து வைத்து புடவையோ அல்லது ரவிக்கைத் துணியோ வாங்கி கொடுத்து ஆசீர்வாதம் பெறலாம். தினமும் அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் உணவை சிறுமிக்கு சாப்பிட கொடுப்பது மிகவும் நல்லது.

நைவேத்யம் செய்யப்படும் உணவுகளில் பூண்டு வெங்காயம் மற்றும் எந்தவிதமான மசாலா பொருட்களையும் சேர்க்காமல் செய்வது நல்லது. நீங்கள் இனிப்பு வகைகள் மற்றும் தினம் ஒரு சுண்டல் வகை என்று நைவேத்தியம் செய்யலாம்.

வீட்டில் நவராத்திரியை முழுமையான ஆச்சார அனுஷ்டானத்துடன் கடைப்பிடிக்கும் போது, வீட்டில் உள்ள ஆண்கள் ஒன்பது நாட்களும் ஷேவிங் செய்யாமல், முடி வெட்டி கொள்ளாமல் இருப்பது மிகவும் சிறப்பானது. தினமும் காலை மற்றும் மாலை அம்பாளின் ஏதாவது ஒரு ஸ்தோத்திரத்தை கூறுவது நல்லது. மாலை பூஜை செய்பவர்கள், மதிய நேரத்தில் தூங்கக் கூடாது. வீட்டில் உள்ள அனைவருமே, நவராத்திரி முடியும் வரை, மாமிசம் சாப்பிடக் கூடாது.

Related Posts

Leave a Comment