கோபுர தரிசனம் கோடி புண்ணியம் …

by Column Editor
0 comment

பொதுவாகவே நமது ஊர்களில் ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு கடவுளின் கோவில்களை அமைத்து அந்த வீதிக்கு, அந்த சுவாமியின் பெயரையே ‘தெருவின் பெயராக’ வைத்து விடுவார்கள். இப்படி நம் வீதியில் இருக்கும் சிறிய கோவிலாக இருந்தாலும் சரி, மன்னர்கள் நமக்காக கட்டிக்கொடுத்த பெரிய கோவிலாக இருந்தாலும் சரி, கோவில் என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது கோபுரம்தான். கோபுரம் என்று சொன்னதும் ‘கோபுரதரிசனம் கோடி புண்ணியம்’ என்ற பழமொழியும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இயல்பு. தினம் தினம் கோபுர தரிசனம் கிடைக்கும் இடத்தில் குடியிருப்பதே பாக்கியம் என்று கூறுவார்கள். அப்படி புனிதமாகவும், பாக்கியமாகும் கருதும் இந்த கோபுரத்தின் சிறப்புகள் தான் என்ன? கோடி புண்ணியத்தை தரும் கோபுரத்தை பற்றி நாமும் தெரிந்து கொள்வோமா.

பொதுவாகவே கோபுரங்கள் என்றால் அன்னார்ந்து பார்க்கும் அளவிற்கு உயரமாக தான் அமைந்திருக்கும். வானளாவிய இந்த உயரமான கோபுரமானது ஊர் மக்களின் நன்மைக்காகவும், நம் ஊரின் நன்மைக்காகவும் தான் கட்டப்பட்டுள்ளது. நமது ஊரை இயற்கை சீற்றங்களில் இருந்து அதாவது இடி, மின்னல் போன்ற தாக்குதலிலிருந்து காப்பதற்கு இந்த கோபுரங்கள் உயரமாக வடிவமைக்கப்பட்டது. கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசத்தினை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அந்த கலசத்திற்கு தான் கும்பாபிஷேகம் செய்யும்போது விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும். கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசமானது வெறும் கலசங்கள் அல்ல. அந்த கலசத்திற்கு உள்ளே கம்பு, நெல், கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சாமை இவைகளை நிரப்பி வைத்திருப்பார்கள். இந்த தானியங்களில் குறிப்பாக வரகு எனப்படும் சிறுதானியம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் வரகிற்கு மின்னலைத் தாங்கும் சக்தி அதிகமாக உள்ளது என்று கூறுகிறது விஞ்ஞானம். கோபுரங்கள் உள்ள பகுதியில் இடி மின்னல் தாக்கினால் அதை கோபுரங்கள் மேலுள்ள கலசம் தாங்கிக்கொள்ளும் என்பது அறிவியல் சார்ந்த உண்மை. இது நம் ஊர் மக்களின் நன்மைக்காக மட்டும்தான்.

அதுமட்டுமல்லாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெள்ளம் வருவதை அறிந்து கொள்ளவும், புயல் வருவதை அறிந்து கொள்ளவும் எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெள்ளமானது ஊருக்குள் வந்து விட்டால் விவசாயிகளின் நிலம், வீடு அனைத்தும் நாசமாகிவிடும். விதை நெல் கூட இல்லாத அளவிற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். மீண்டும் தானியங்களை விளைவிப்பதற்கு விதைநெல் இருக்காது. ஆனால் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் தானியமானது எந்தவித சேதாரமும் இல்லாமல் அங்கேயே பத்திரமாக இருக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு கோபுர கலசத்தில் இருக்கும் தானியங்களை எடுத்து விளைச்சலுக்காக பயன்படுத்திய காலமும் உண்டு. இது முழுக்க முழுக்க மக்களின் நன்மைக்காக கடவுள் சேமித்து வைக்கும் தானியமாக கருதப்பட்டது.

அடுத்ததாக கோபுரத்தின் கலசமானது தங்கம், வெள்ளி, செம்பு, இவைகளால் பிரதிஷ்டை செய்யப்படும். இந்த உலோகங்களில் செய்யப்படும் கலசங்கள் தெய்வீக ஆற்றலை ஈர்க்கும் சக்தி வாய்ந்ததாக அமைகின்றது. அதுமட்டுமல்லாமல் கும்பாபிஷேகம் சமயத்தில் ஓதப்படும் மந்திரங்களானது தெய்வீக ஆற்றலை அந்த கலசத்திற்கு தந்துவிடுகிறது. இதில் தெய்வீக ஆற்றல் உள்ளது என்பதை நாம் எப்படி உணர முடியும்.

வானளவு உயர்ந்து நிற்கும் எத்தனையோ கட்டிடங்களை நாம் கண்டிருக்கின்றோம். வியந்தும் இருக்கின்றோம். ஆனால் கோபுரத்தில் பார்க்கும்போது மட்டும் தான் நம் இருக்கைகளும் தானாகவே அதை கும்பிட முன் வருகிறது. இதற்கு காரணம் கோபுர கலசத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் தான். இப்படி தூரத்தில் வரும் பக்தர்களின் ஆற்றலை வசீகரிக்கும் தன்மையானது இந்த கோபுரத்திற்கு உள்ளது என்பதை நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்போம். நம்மில் பலர் கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு கோவிலின் கோபுரத்தை கண்டவுடன் இரு கைகளையும் கூப்பி கும்பிட்டு பின்புதான் கோவிலுக்குள் நுழைவோம். இது நமக்கு இயல்பாகவே வந்துவிடும் அல்லவா? அந்த கோபுரத்தை கும்பிட வேண்டும் என்று நம்மை தூண்டுவதே அந்த கலசத்தில் இருக்கும் இறைசக்தி தான். கோவிலுக்குள் செல்ல முடியாதவர்கள் இந்த கோபுரத்தை தரிசித்து விட்டு சென்றாலும் கூட அந்த இறைவனை தரிசித்த புண்ணியம் நமக்கு கிடைத்துவிடும் என்று கூறுகிறது சாஸ்திரம்.

Related Posts

Leave a Comment