இன்று தென் ஆப்பிரிக்கா தனியார் டி20 லீக் வீரர்கள் ஏலம்…

by Column Editor
0 comment

தென் ஆப்பிரிக்காவில் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் உரிமை எடுத்திருக்கும் 6 அணிகள் கொண்ட டி20 லீக்குக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் உரிமை எடுத்திருக்கும் 6 அணிகள் கொண்ட டி20 லீக்குக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெறுகிறது.

ஐசிசி உலகக்கோப்பை 2023-ல் தகுதி பெறும் வாய்ப்புக்காக தகுதிச் சுற்று ஆடினாலும் பரவாயில்லை என்று இந்த டி20 லீகுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையே வேண்டாம் என்று உதறியது தென் ஆப்பிரிக்கா. அப்படியென்றால் இந்த டி20 லீக் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் நிதி ஆக்சிஜன் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை என்று தெரிகிறது.

அணிகள் என்னென்ன?

எம்.ஐ. கேப்டவுன், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், ஜொஹான்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப். இந்த 6 அணிகளின் உரிமையாளர்களும் ஐபிஎல் உரிமையாளர்களே.

தொடர் எப்போது?

ஜனவரி – பிப்ரவரி 2023 என்று கூறப்படுகிறது, இதே காலக்கட்டத்தில்தான் இதே இந்திய உரிமையாளர்கள் அணிகளை வாங்கியுள்ள யுஏஇ டி20 லீக் தொடரும், பக்பாஷ் ஆஸ்திரேலியா டி20 தொடரும் வங்கதேச தனியார் டி20 லீக் தொடரும் நடைபெறுகிறது. எனவே வீரர்கள் எந்தத் தொடரில் ஆட முடிவெடுப்பார்கள் என்பது ஒரு பெரிய விஷயம்தான்.

ஏலத்தில் எத்தனை வீரர்கள்:

இந்த ஏலத்துக்காக மொத்தம் 533 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஆனால் அனைவருமே ஏலத்தில் விலை பேசப்படுவார்கள் என்று உத்தரவாதமல்ல. ஒவ்வொரு அணியும் 17 வீரர்களைத் தேர்வு செய்யலாம். இதில் 248 வீரர்கள் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரர்கள்.

அணி உரிமையாளர்கள் தங்கள் அணியில் 10 தென் ஆப்பிரிக்க வீரர்கள் மற்றும் 7 அயல்நாட்டு வீரர்களைத் தேர்வுசெய்து கொள்ளலாம். ஐபிஎல் போலவே ஒரு அணியில் அதிகபட்சம் 4 அயல்நாட்டு வீரர்களே பிளேயிங் லெவனில் ஆட முடியும்.

ஒவ்வோர் உரிமையாளரும் அதிகபட்சம் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஏலத்தில் செலவிடலாம். 17 வீரர்களைத்தான் தேர்வு செய்ய முடியும். ஏலத்துக்கு முந்தியே 6 அணிகளும் சேர்ந்து 23 வீரர்களைத் தேர்வு செய்திருப்பதால் இதற்காகச் செலவிட்ட தொகை போக மீதித்தொகைக்குத்தான் இன்றைய ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்ய முடியும்.

இதுவரை தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் விவரம்:

எம்.ஐ. கேப்டவுன்: கேகிசோ ரபாடா, தேவால்ட் பிரெவிஸ், ரஷீத் கான், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன்.

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: குவிண்டன் டி காக், பிரனலன் சுப்ராயன், ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ், ரீஸ் டாப்லி

ஜொஹான்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்: டுபிளெசிஸ், குயெட்ஸீ, மொயீன் அலி, மஹீஷ் தீக்‌ஷனா, ரொமாரியோ ஷெப்பர்ட்

பார்ல் ராயல்ஸ்: டேவிட் மில்லர், கார்பின் பாஷ், ஜாஸ் பட்லர், ஓபெட் மெக்காய்.

பிரிட்டோரியா கேப்பிடல்ஸ்: ஆன்ரிச் நார்ட்யே, மிகெயெல் பிரிட்டோரியஸ்.

சன் ரைசர்ஸ் கேப்பிடல்ஸ்: அய்டன் மார்க்ரம்,ஆட்னியல் பார்ட்மான்.

எத்தனை போட்டிகள்?

மொத்தம் 33 போட்டிகள், இந்த 6 அணிகளும் ஒருவரை எதிர்த்து ஒருவர் இருமுறை மோத வேண்டும். 2 அரையிறுதி ஒரு இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை கேப்டவுனில் வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது.

Related Posts

Leave a Comment