திருமந்திரம் – பாடல் 1533 : ஐந்தாம் தந்திரம் – 21

by Column Editor
0 comment

புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

ஆறு சமையமுங் கண்டவர் கண்டில
ராறு சமையப் பொருளும் பயனில்லைத்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே.

விளக்கம்:

இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும் கண்டு அதன் பொருளை மேம்போக்காக அறிந்து கொண்டவர்கள் அந்த வழிமுறைகளின் உட் பொருளாக இருக்கின்ற தத்துவங்களை அறிந்து கொள்ள வில்லை. இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளும் சொல்லுகின்ற உட் பொருளான தத்துவங்களை அறிந்து கொள்ளாத காரணத்தால் அவர்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. ஆகவே ஆறு விதமான வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். அறிந்த பிறகு அதனை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு தெளிவாக உணர்ந்த பிறகு எந்த விதமான மாறுபாடும் இல்லாமல் உறுதியாக வீடு பேறு என்று அறியப்படுகின்ற முக்தியை அடைவது கைகூடும்.
குறிப்பு: ஆறு சமயங்கள் என்பது இறைவனை அடைவதற்கான ஆறு வழி முறைகளாகும். இதனை பாடல் #1530 இல் பார்க்கவும்.

Related Posts

Leave a Comment