இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா – தோனி பங்கேற்பு!!

by Column Editor
0 comment

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. கடந்த 28ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். விழாவின் தொடக்கத்தில் தமிழரின் பாரம்பரியம் ,பண்பாடு, கலாச்சாரத்தை கூறும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவை வெளிநாட்டவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 29ஆம் தேதி முதல் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் செஸ் போட்டிகள் நடைபெற தொடங்கின. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்று விளையாடி வந்தனர்.

கிட்டத்தட்ட 12 நாட்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பிக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக பிரபல கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டருமான எம்.எஸ். தோனி, உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அத்துடன் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை ஒட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment