திருமந்திரம் – பாடல் #1487: ஐந்தாம் தந்திரம் – 9.

by Column Editor
0 comment

சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

மார்கஞ்சன் மார்கிகட் கட்ட வகுப்பது
மார்கஞ்சன் மார்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்கஞ்சன் மார்க மெனுநெறிவை காதோர்
மார்கஞ்சன் மார்க மதிசித்த யோகமே.

விளக்கம்:
தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய உண்மை வழி முறையை கடைபிடிப்பவர்கள் முறைப்படி கட்டமைத்து வகுத்து வைத்த நெறி முறைகள் அல்லாமல் வேறு ஒரு வழி முறைகளும் இல்லை. உண்மை வழி முறை என்று சொல்லப்படும் அந்த நெறி முறைகளை வகுத்து வைத்த முறைப்படி தவறாமல் காத்து கடை பிடிப்பவர்களுக்கு எண்ணத்தை எல்லாம் சிவப் பரம்பொருளின் மேல் வைத்து செய்கின்ற மிகவும் உயர்ந்த யோகமாக அந்த உண்மை வழியே இருக்கின்றது.

Related Posts

Leave a Comment