புஜ் – செந்நாரைகளின் ஓய்விடம்

by Lifestyle Editor
0 comment

ஆழ்ந்த சரித்திரப் பின்னணியைக் கொண்டிருக்கும் நகரமான புஜ், கட்ச்சின் தலைமைச் செயலகமாகவும் விளங்குகிறது. இந்த நகரின் பெயர், புஜியோ துங்கார் என்ற பெயரில் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலையின் பெயரை அடைமொழியாகக் கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் இது புஜங் என்ற மிகப் பெரிய சர்ப்பம் வாழும் இடமாகவும் கருதப்படுகிறது. இந்த சர்ப்பத்துக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு கோயில் மலையுச்சியில் காணப்படுகிறது.

வரலாறு

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் தொடங்கி, இந்திய வரலாற்றுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது புஜ் நகரம். இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகம் மற்றும் மாவீரர் அலெக்ஸாண்டரின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து, ஜடேஜா ரஜபுத், குஜராத் சுல்தனேட் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி வரை வரலாற்றின் அனைத்து காலகட்டங்களின் மௌன சாட்சியாக புஜ் நகரம் இருந்து வந்துள்ளது.

18 ஆம் நூற்றாண்டில், முகாலயப் பேரரசின் வீழ்ச்சியினால் உருவான அப்போதைய அரசியல் சூழலில் இருந்து கட்ச் பகுதியை பாதுகாக்கும் பொருட்டு, ராவ் கோட்ஜி, புஜ் கோட்டையைக் கட்டியிருக்கிறார். இந்த கோட்டை, நகரைச் சுற்றிலும் சுமார் 11 அடி சுவர்களையும், 51 துப்பாக்கிகளையும் கொண்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்

புஜ் நகரில் பார்க்க வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஏராளமானவை உள்ளன. ஷரத் பௌக் அரண்மனை, 1991 ஆம் வருடத்தில், கட்ச் பகுதியின் கடைசி மன்னரான மதன்சிங் இறக்கும் வரை, மன்னரின் வசிப்பிடமாக இருந்துள்ளது.

அயினா மஹால் என்றழைக்கப்படும் கண்ணாடிக் கூடம், லக்பத்ஜி மன்னரின் ஆட்சிக்காலத்தின் போது தேர்ந்த கைவினைக் கலைஞரான ராம்சிங் மாலம் அவர்களால் கட்டப்பட்டுள்ளது.

பிரக்மால்ஜி மன்னரால் இத்தாலிய கோத்திக் பாணியைத் தழுவி கட்டப்பட்டுள்ள ப்ரக் மஹாலின் மணி மண்டபம் கட்டாயம் காண வேண்டிய ஒன்று.

இராமாயண கதாப்பாத்திரங்களின் சிலை வடிவங்களைக் கொண்டிருக்கும் ராமகந்த் படிக்கிணறு மற்றும் சதார்டிஸ் என்றழைக்கப்படும் அரச கோபுரங்கள் ஆகியவையும் காணப்படுகிறது.

இவை தவிர, 2000 வருட பழமை வாய்ந்த க்ஷத்ரபா குறிப்புகள் உள்ள கட்ச் அருங்காட்சியகம் மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து புராதன கட்டிடங்களையும் அதன் பக்கவாட்டில் கொண்டுள்ள ஹமீர்ஸர் ஏரி ஆகியவையும் இங்கு காணப்படுகின்றன.

இங்குள்ள சுவாமி நாராயண் கோயிலில், கிருஷ்ண பகவான் மற்றும் ராதை ஆகியோரின் கதைகளை சித்தரிக்கும் கண்கவர் மரச்சிற்பங்கள் கோயில் வளாகத்தைச் சுற்றிலும் காணப்படுகின்றன.

சமயம்

புஜ் நகரில், சுவாமி நாராயண் சம்பிரதய் என்ற வைஷ்ணவப் பிரிவு மிகவும் பிரபலமாக உள்ளது. இதற்குக் காரணம், முதன் முதலாக உருவாக்கப்பட்ட இவர்களின் முக்கிய கோயில் இங்கு தான் அமைந்துள்ளது.

புஜ் நகரின் ஆதிக்க சமயங்கள், மேற்கூறிய வைஷ்ணவப் பிரிவு, இந்து மதம், ஜைனம் மற்றும் இஸ்லாம் ஆகியவையே ஆகும். லக்பத்தில் ஒரு சீக்கிய குருத்வாராவும் உள்ளது. ஸ்ரீ குரு நானக் அவர்கள் கட்ச்சுக்கு வருகை தந்த போது இந்த குருத்வாராவில் தான் தங்கியிருந்திருக்கிறார்.

இயற்கை சூழல் மண்டலங்கள்

காவ்தா என்ற பிரபலமான இயற்கை பூங்கா புஜ் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. புஜ் நகரின் வடக்குப்புறத்தில் சுமார் 72 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காவ்தா, உலகின் மிகப் பெரும் செந்நாரைக் கூட்டத்தின் புறப்பாட்டு ஸ்தலமாக புகழ் பெற்று விளங்குகிறது.

புலம்பெயர்ந்து செல்லும் சுமார் அரை மில்லியன் செந்நாரைகள் ஒவ்வொரு வருடமும் ஜாம்குந்தாலியாவின் பாலைவனத்தில் உள்ள ஒரு ஏரியில் வந்து ஓய்வெடுத்துச் செல்கின்றன.

இந்த செந்நாரைகளின் குடியிருப்பை ஒட்டகத்தில் சென்று பார்த்து வரலாம். அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையில் நிலவும் குளிர்காலமே இங்கு வருவதற்கு ஏதுவான காலமாகும்.

புஜ் நகரின் வடமேற்கு பகுதியில் சுமார் 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சாரி தந்த், இயற்கைச் சூழல் அமைந்த மற்றொரு சுற்றுலா மையமாகும். “சாரி” என்ற சொல்லுக்கு “உப்பினால் பாதிக்கப்பட்ட” என்றும் “தந்த்” என்ற சொல்லுக்கு “ஆழமற்ற ஈர நிலங்கள்” என்றும் அர்த்தமாகும்.

உப்புத்தன்மை வாய்ந்த ஈர நிலமான இந்த இடத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும், பறவை அபிமானிகளும் 370 வகை பறவையினங்களை, முக்கியமாக கொடும் பறவையினங்கள், நீர்ப்பறவைகள், நீரில் நடக்கும் பறவைகள் மற்றும் வானம்பாடிகளை கண் குளிரப் பார்க்கலாம்.

காவ்தாவின் வடக்குப்புறத்தில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள கருமலைகள், கட்ச் பகுதியின் மிக உயரமான இடமாகும். இங்கு, வடக்குப்புற அடிவானம், கிரேட் ரான் எனப்படும் பாலைவனத்தினுள் மறைந்து, வானத்தைப் பிரித்துப் பார்ப்பதே இயலாது என்பது போல் தோற்றமளிக்கிறது.

பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது இந்த இடம். கருமலைகளின் உச்சியில் ஒரு இராணுவப் பணிமனை உள்ளது; இதனைத் தாண்டிச் செல்ல இராணுவ நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

பிரம்மதேவர், விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமான் ஆகியோரின் மூன்று முகங்களும் ஓரே உடலில் அமைந்திருக்கும் அவதாரமாக சித்தரிக்கப்படும் தத்தாத்ரேயாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, சுமார் 400 ஆண்டு பழமை வாய்ந்த கோயில், இம்மலை உச்சியில் அமைந்துள்ளது.

ஏனைய சுற்றுலா ஈர்ப்புகள்

புஜ் நகரம், கட்சி எம்ப்ராய்டரி என்றழைக்கப்படும் கைவினைத் தொழிலுக்கு, சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

தொல் பழங்காலத் தொடர்புகளைக் கொண்டிருக்கும் புஜ், பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. பல்வேறு வகையான புதிய அனுபவங்களை அளிக்கவல்ல புஜ், அனைவராலும் விரும்பத்தக்க ஒரு சுற்றுலாத் தலம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Related Posts

Leave a Comment