கேரளாவில் யாருக்கும் தெரியாத ’மினி பட்ஜெட் கோவா’…

by Column Editor
0 comment

குறைந்த செலவில் ஒரு மினி கோவா அனுபவத்தைக் கண்டிப்பாகக் கேரளாவில் உள்ள வர்கலாவில் பெறலாம். எப்படி?

வர்கலா என்ற கடற்கரை நகரின் பெயர் தற்போது தமிழ் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. டிரிப் அல்லது டூர் செல்ல விருப்பப்படும் இளைஞர் பட்டாளம் சமீப காலமாக வர்கலாவைத் தேர்ந்தெடுத்துச் செல்கின்றன.

கோகர்னாவை ஒரு குட்டி கோவா என்று அழைப்பார்கள். வர்கலா ஒரு குட்டி கோகர்னா. இந்தியாவில் வேறு எந்த கடற்கரையிலும் இல்லாத அழகும் தனித்துவமும் வர்கலாவுக்கு உண்டு.

திருவனந்தபுரத்திலிருந்து 40கிமீ தூரத்தில் உள்ள வர்கலா கடற்கரையில் இயற்கையாகவே அமைந்த 80 அடி உயரப் பாறைதான் (கிளிஃப்) அதற்குக் காரணம். சில கிலோமீட்டர்கள் நீளும் இந்த கிளிஃபின் இடது பக்கம் எட்டிப் பார்த்தால் 80 அடி ஆழத்தில் கடல். வலது பக்கம் முழுக்க உணவகங்களும், தங்கும் விடுதிகளும், சிறியத் துணிக்கடைகளும் நிறைந்திருக்கும்.

5 மணிவரை சாதாரண கடற்கரையாகவே காட்சியளிக்கும் வர்கலா அதன் பின்பு ஒரு ‘பார்டி பீச்சாக’ மாறுவதை நம் கண் முன்னால் காண முடியும். வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உணவகங்கள் அதே கடற்கரையில் பிடிபட்ட கடல் உணவுகளைத் தயாரித்துச் சுடச்சுடப் பரிமாறத் தயாராகும். அதுவரை அமைதியாக இருந்த கடற்கரை ஆங்காங்கே ஓடும் பாடல்களாலும், இசையாலும் புத்துணர்வுப் பெறும். பார்டி வியர் உடைகளில் ஆண்களும், பெண்களும் கூட்டமாக ஒன்று சேர கிளிஃபே கோலாகலமாக மாறும்.

வர்கலாவில் தவறவிடக்கூடாதது அக்கடற்கரையில் நிகழும் சூரிய அஸ்தமனம். வர்கலா கிளிஃபில் உள்ள உணவகங்களில், மேஜையில் நமக்குப் பிடித்த உணவோடோ அல்லது உற்சாக பாணத்தோடோ மாலை 5:30 மணிக்கு மேல் அமர்ந்து கடலை நோக்கினால், சூரிய அஸ்தமனத்தால் வானமே ஆரஞ்சு வண்ணத்தில் மாறி அது கடலையும் தீப்பற்ற வைப்பதைப் பார்க்க அலாதியான அனுபவமாக இருக்கும். அதன் பின் விடிய விடிய கிளிஃபே கொண்டாட்டத்தில் திளைக்கும்.

இரவு முழுக்க வர்கலா கடற்கரையில் இருப்பதற்கு எந்தத் தடையும் கிடையாது. பாதுகாப்பானதும் கூட. இரவு 2 மணிக்கு மேல் கிளிஃபின் உணவகங்கள், கடைகள் அடைக்கப்பட்டபின் பலர் ஆங்காங்கே கடலை ஒட்டி மணலில் குழுவாக அமர்ந்து அரட்டை அடிப்பதையும் நம்மால் பார்க்க முடியும். பலர் கடற்கரையிலேயே கூட்டமாக உறங்குவதையும் நம்மால் பார்க்க முடியும்.

வர்கலாவிற்கு உலகம் முழுவதிலிருந்தும் டிராவலர்கள் வருகிறார்கள். 300 ரூபாய் ஒரு நாள் வாடகையில் தங்கும் விடுதிகளிலிருந்து 10,000 ரூபாயைத் தாண்டும் அதிநவீன ரிசார்ட்கள் வரை வர்கலாவில் உண்டு. வர்கலாவின் கிளிஃபிலேயே நிறையத் தங்கும் விடுதிகள் உள்ளன. அங்கு ரூம் போட்டுக்கொண்டால் நாள் முழுக்க அறையிலிருந்து கடலை ரசிக்கலாம்.

விடியற்காலையில் ஒரு நடை சென்றால் கிளிஃபே அடங்கி நேற்றைய இரவுக் கொண்டாட்டத்தின் எந்த சுவடும் இல்லாமல் அமைதியாக இருக்கும். இதுதவிர காப்பில் பீச், பிளாக் சாண்ட் பீச் என இன்னும் சில கடற்கரைகளும் உள்ளன வர்கலாவில் உள்ளன. இதில் பிளேக் சாண்ட் பீச்சில் கடற்கரை மண் கருப்பு வண்ணத்தில் இருப்பதால் அதற்கு அப்பெயர்.

கடற்கரை மட்டுமில்லாமல் வர்கலாவுக்கு அருகிலேயே முன்ரோ ஐலாண்ட் என்ற சதுப்புநலக்காடுகளுக்கோ, ஜடாயு என்ற மிகப் பிரம்மாண்டமான பூங்காவிற்கோ சென்று வரலாம். வர்கலாவைச் சுற்றிப் பார்க்கச் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் என எதை வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

சென்னையிலிருந்து வர்கலா செல்ல ஸ்லீப்பர் டிரைன் கட்டணம் 500 ரூபாய்க்குள் தான் வருகிறது. ரிசார்ட், ஹோட்டல்களுக்கு செலவழிக்க விரும்பாதோர் ஹாஸ்டல்களில் தங்கினால் மிகக் குறைந்த செலவில் கிளிஃபிலேயே தங்கிக்கொள்ளலாம்.

மொத்தத்தில் குறைந்த செலவில் ஒரு மினி கோவா அனுபவத்தைக் கண்டிப்பாக வர்கலாவில் பெறலாம்.

Related Posts

Leave a Comment