3000 ஆண்டுகள் பழமையான மரத்தால் ஆன செயற்கை கால்விரல்…

by Column Editor
0 comment

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னால் எகிப்தின் மேற்கே ஷேக் அப்துல் குர்னா நெக்ரோபோலிஸில் உள்ள புதைகுழியில் பணிபுரிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வித்தியாசமான ஒன்றைக் கண்டுபிடித்தனர். அது ஒரு செயற்கை பெருவிரல். இது உயர் அந்தஸ்து கொண்ட பண்டைய எகிப்திய பாதிரியார் ஒருவரின் மகளின் காலில் பொருத்தப்பட்ட மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட செயற்கை பெருவிரல்.

கெய்ரோ டோ அல்லது கிரெவில் செஸ்டர் கிரேட் டோ என அழைக்கப்படும் இந்த செயற்கை கால்விரல் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானது. இப்படி செயற்கையாக வடிவமைக்கப்பட்ட கால் விரல் கண்டுபிடிப்பது இதுவே முதல் முறை. நவீன நுண்ணோக்கி, எக்ஸ்ரே தொழில்நுட்பம் மற்றும் கணினி டோமோகிராபி ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் கால்விரலை கூர்மையாக ஆராய்ந்துள்ளனர்.

அந்த கால்விரலை கொண்டு எடுக்கப்பட்ட 3D ஸ்கேன் எந்தவிதமான செயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதை அடையாளம் கண்டுள்ளது. இதிலும் மிகவும் சுவாரஸ்யமாக அந்த பெண்ணின் பாதத்துடன் சரியாகப் பொருந்துவதற்காக அந்த செயற்கை கால்விரல் பல முறை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இது 3000 ஆண்டுகளுக்கு முன்பே மனித உடலியல் பற்றி நன்கு அறிந்த ஒரு கைவினைஞரின் திறமைக்கு சிறந்த சாட்சியாக அமைகிறது.

இந்த செயற்கை கால்விரல் மிகவும் கடினமான நுட்பமான முறையில் செய்யப்பட்டுள்ளது. அழகான இயற்கையான தோற்றம் கொண்டு செயற்கை கால்விரலை அணியும் வசதி கூட மிகவும் நுட்பமாக எளிமையாக அணியும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கை கால் விரல் பொருத்தப்பட்ட நபரின் வயது 50 மற்றும் 60 வயதிற்குள் இருந்திருக்கலாம். இந்த செயற்கை கால்விரல் முக்கியமாக நல்ல அழகான தோற்றத்திற்காக அணியப்பட்டதா? இல்லை அதை அணிந்தவருடைய சமநிலை மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக அணியப்பட்டதா என்பது தெரியவில்லை.

அதாவது அவர் நடப்பதற்கு எளிதான வகையில் செயற்கை கால் விரல்கள் பொருத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த செயற்கை கால் விரல் கால்களில் சரியாக பொருத்துவதற்கு ஏற்ப தோல் மற்றும் மரக் குச்சிகளை கொண்டு நன்றாக நூலால் தைத்து அழகாக காலில் பொருந்தும் விதமாக நுட்பமாக வடிவமைத்துள்ளார்கள். நுட்பமாக வடிவமைத்து இருந்தாலும் இந்த செயற்கை கால் விரல் அணியும் பொழுது பிறர் தெரியும் வண்ணம் இருக்கும்.

அதனால் அந்த காலத்தில் இதை அழகுக்காக பயன்படுத்தி இருக்கிறார்களா இல்லை காலை சரியாக ஊன்றி நடப்பதற்காக பயன்படுத்தி இருப்பார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த செயற்கை கால் விரல் மூட்டுகளில் நிஜ கால்விரல்களை போல வளைந்து கொடுப்பதற்கு ஏற்ப அமைக்கப்படவில்லை. இருந்தாலும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படிப்பட்ட கலை நுணுக்கமான செயற்கை கால் விரல்களை எகிப்தியர்கள் செய்து பயன்படுத்தியுள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித நவீன உபகரணங்களும் இல்லாத அந்த காலகட்டத்திலும் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளை எப்படி அவர்களால் செய்ய முடிந்தது என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

Related Posts

Leave a Comment