சமையல் அறையில் இன்றளவில் எரிவாயு இல்லாத வீடுகளே இல்லை. எளிது, விரைவு என்று விறகு மற்றும் வறட்டி அடுப்புகளில் இருந்து கியாஸ் சிலிண்டர் பக்கம் அனைவரும் மாறிவிட்டோம். சிலிண்டர் அடுப்பை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அறியாமல் செய்யும் செயலால் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு அபாயமும் இதில் உள்ளது.
நெருப்பில் கவனம்:
கியாஸ் அடுப்பை பொறுத்த வரையில், அதனுள் இருந்து வரும் தீயின் அளவை அதிகம், குறைவு, மிதமானது என 3 வகைகளில் நாம் தேவைக்கேற்ப உபயோகம் செய்கிறோம். தேவை ஏற்பட்டால் மட்டுமே அதிகளவு தீயில் சமையல் செய்ய வேண்டும். சாதாரண நேரங்களில் மிதமான தீயே நல்லது. அடுப்பை ஆன் செய்து, பர்னரை உடனடியாக பற்றவைக்க வேண்டும். எதோ ஒரு யோசனையில் மறந்துவிட்டு, சில நொடிகள் கழித்து தீ வைப்பது பெறும் விபத்தில் முடியலாம்.
அடுப்பின் சுத்தம்:
மனிதனின் வாழ்நாட்களை நகர்த்த, அவனுக்கு தேவையான உணவுகளை சமைப்பது எப்படி முக்கியமோ, அதனைப்போல அடுப்பை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைப்பதும் அவசியம் ஆகும். தினசரி அல்லது வாரம் ஒருமுறை கட்டாயம் அடுப்பை சுத்தம் செய்ய வேண்டும். அடுப்பில் எண்ணெய் கரை இருக்கும் பட்சத்தில், அதனை எலுமிச்சை சாறு கொண்டு சுத்தம் செய்யலாம்.
கவனம்:
கியாஸ் அடுப்புகளை பொறுத்த வரையில் சமையல் செய்யும் நேரங்களில் கவனச்சிதறல் கூடாது. அடுப்பில் இருந்து வீட்டின் உள்ளேயே சற்று தொலைவு செல்ல வேண்டும் என்றால், தீயை மிதமாக வைப்பது நல்லது. எண்ணெய் போன்றவற்றை கியாசில் வைத்து, அடுப்பை விட்டு தூர செல்ல கூடாது. சில நேரங்களில் எண்ணெய் தீப்பற்றவும் வாய்ப்புள்ளது. அடுப்பை சுற்றிலும் எளிதில் தீப்பற்றும் பொருளை வைக்காமல் இருக்க வேண்டும். குளிர்பதன பெட்டி இருந்தால், அதனை சமையல் அறையில் இருந்து வெளியே வைப்பது சாலச்சிறந்தது.
அத்தியாவசியம்:
சமையல் பொருட்களில் அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்கள் சமையல் அறையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான பொருட்களாக இருந்தால், கியாஸ் அடுப்பில் இருந்து சற்று தொலைவில் அதனை வைக்க வேண்டும். தொலைக்காட்சியில் படங்கள் பார்த்துக்கொண்டு ஓடி ஓடி சமைப்பதை தவிர்ப்பது நல்லது. அடுப்பில் எண்ணெய் ஊற்றி, அது தீப்பிடிக்கும் சூழல் தவிர்க்கப்படும். அதனால் ஏற்படும் காயமும் இல்லாமல் உடல் நலம் பாதுகாக்கப்படும்.
கியாஸ் சிலிண்டரின் வால்வு பகுதி சிலிண்டருடன் பொருந்தியுள்ளதா? ரெகுலேட்டர் சரியாக உபயோகம் ஆகிறதா? என்பதை சிலிண்டர் காலியாகும் நேரங்களில் மாற்றும் போது கவனிக்க வேண்டும். எதிர்பாராத சூழ்நிலையால் சிலிண்டர் வால்வு பகுதியில் தீப்பற்றிவிடும் பட்சத்தில், சூடான பாத்திரத்தை பிடிக்க வைத்திருக்கும் துணியை அல்லது காலடி சாக்கினை உடனடியாக நீரில் அனைத்து தீயை அணைக்க முயற்சிக்கலாம்.