திருமந்திரம் ( பாகம் 16 )

by News Editor
0 comment

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

திருமந்திரம் என்னும் தமிழ் மந்திரம் மூவாயிரம்

“மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்

ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே”                              பாடல் 99

திருமூலர் அருளிய மூவாயிரம் பாடல்களான தமிழ் மந்திரங்கள், இந்த உலகம் பயன் அடைய, நந்தி எம்பெருமான் அருளாலே திருமூலர் திருவாக்காக வெளிப்பட்டது. இம்மந்திரங்களை ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து, அதன் உண்மைப் பொருள் உணர்ந்து, படித்துப் பாராயணம் செய்தால் உலகுக்கெல்லாம் தலைவனாகிய சிவப் பரம்பொருளின் பேரருள் கிடைக்கப் பெறுவர்.

எல்லோருக்கும் பொதுவான திருமந்திரம்

“வைத்த பரிசே வகைவகை நன்நூலின்

முத்தி முடிவிது மூவா யிரத்திலே

புத்தி செய்து பூர்வத்து மூவாயிரம் பொது

வைத்த சிறப்புத் தரும்இவை தானே”                                  பாடல் 100

ஆன்மாக்கள் உய்ய வகுத்து வைத்த பரிசே இத்திருமந்திரம் என்னும் நல்ல வேதம். இதில் உள்ள மூவாயிரம் பாடல்களும் வீட்டின்ப விளக்கமாகும். அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செய்யப்பட்ட மூவாயிரம் தமிழ் மந்திரங்களும் எல்லோருக்கும் பொதுவானவை. சிந்தையில் பதித்து செபிப்பவர்களுக்குச் சிறப்பைத் தருபவை இம்மந்திரங்களே.

சுந்தர ஆகமம் திருமந்திரம்

“வந்த மடம்ஏழும் மன்னும் சன்மார்க்கத்தின்

முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை

தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்

சுந்தர ஆகமச் சொல் மொழிந்தானே”                                  பாடல் 101

சிவ நெறி பரப்ப வந்த திருமடங்கள் ஏழு. இவற்றில் சன்மார்க்க நன்நெறியில் நின்று திருத்தொண்டு செய்ய என்று முதன் முதலாகத் தோன்றியது திருமூலர் திருமடம். ஒன்பது தந்திரம் தொடர்பான மூவாயிரம் மந்திரங்கள் என்னும் இவ்அழகிய திருமந்திர மொழியாகிய ஆகமத்தைத் திருமூலர் அருளினார்.

தவயோகிகள் எழுவர்

“கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்

நலந்தரு மாளிகைத் தேவர் நாதாந்தர்

புலம்கொள் பரமானந்தர் போக தேவர்

நிலம்திகழ் மூலர் நிராமயத் தோரே”                                  பாடல் 102

திருவருளும் குருவருளும் கலந்த மெய்த் தவயோகிகள் காலாங்கர், அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகநாதர், திருமூலர் என்னும் எழுவராவர். இவர்கள் அனைவரும் இறவா உடல் பெற்ற தவஞானிகள்.

                                               வேத விழுப் பொருள்

“அளவுஇல் இளமையும் அந்தமும் ஈறும்

அளவுஇல் காலமும் நாலும் உணரில்

தளர்விலன் சங்கரன் தன்அடியார் சொல்

அளவில் பெருமை அரிஅயற்கு ஆமே”                                பாடல் 103

காலகாலமாக என்றும் குறையாது இருக்கின்ற எல்லையில்லாத இளமைத் தோற்றமும், அளவிட இயலாத அருளும், எண்ண முடியாத பல கோடி கற்ப காலமாக நான்மறைகளாலும் உணர்ந்தறிய முடியாததாகிய சிவபெருமானின் அடியவர்களாகிய மெய்த் தொண்டர்கள் மொழிந்த மந்திரங்களின் சொல்ல முடியாத பெருமை, திருமாலும், பிரமனும் கூட அறிந்துணர முடியாததாகும்.

மூவரும் ஒருவரே

“ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்

ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்

சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார்

பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே”                              பாடல் 104

உலகத் தோற்றத்திற்கு மூல முதல் காரணமான உருத்திரனும், அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்திருக்கும் நீலமணி வண்ணமுடைத் திருமாலும், உயிர்களைப் படைப்பவனாகிய தாமரை மலர் மேல் இருக்கின்றவனான பிரமனும், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களால் வேறானாலும், மூவரும் ஒரு மூலப் பரம்பொருளான சிவனே என்பதை உணராமல், இவர்கள் மூவரும் வேறு, வேறு என்று வித்தியாசப்படுத்தி, உலகத்தவர் மோதி முரணுகிறார்களே!

பிரணவப் பொருளானவன் பெருமான்

“ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்

பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது

ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்

தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே”                                   பாடல் 105

இறைவன் இருவினையாகிய கன்மம் மாயை என்னும் இரண்டுக்கும் இருப்பிடமானவன். இரண்டையும் கடந்து நிற்பவன். இந்த ஈசனை அடைய “ஓம்” என்னும் பிரணவ மந்திரமே முதல் பெரும் தெய்வம். இந்த உண்மையை அறியாமல் கடவுள், அது, இது எனப் பலவாறு கூறுவர். இவர்கள் உண்மை உணராதவர்கள். ஆனால் இந்த உண்மையைத் தூய நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் மெஞ்ஞானிகள் உணர்ந்து, பரம்பொருள் மூலத்தையே அறிந்திருந்தார்கள்.

Related Posts

Leave a Comment