திறக்கப்பட்ட சொர்க்கவாசல்…எழுந்தருளிய பெருமாள் – எங்கும் எதிரொலித்த கோவிந்தா முழக்கம்

by Column Editor
0 comment

கோவிந்தா… கோவிந்தா முழக்கம் எங்கும் எதிரொலிக்க இன்று பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளிய மலையப்பசுவாமியை கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி மோட்ச ஏகாதசியாகவும் வைகுண்ட ஏகாதசியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சொர்க்கவாசல் வழியாக பெருமாளுடன் சென்றால் சொர்க்கம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமலை ஏழுமலையான் கோவில், திருப்பதி கோவிந்த ராஜ பெருமாள் உள்ளிட்ட பல முக்கிய வைணவ தலங்களில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவிலான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை யொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை அணிவிக்கப்படும் ரத்ன அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அத்திகிரி மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ரத்ன அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் பெருந்தேவித் தாயார் உடன் எழுந்தருளிய வரதராஜப் பெருமாளை ஏராளமான பக்தர்கள் திரளாக கூடி நின்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தண்டையார்பேட்டை சீனிவாச வரதராஜ பெருமாள்:

சென்னையில் புகழ் பெற்ற தலங்களில் ஒன்றான தண்டையார்பேட்டை சீனிவாச வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்சவர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருக்கோவிலின் உட்பிரகாரங்கள் சுற்றிவர மேளதாளங்கள் முழங்க ஓய்யாலி நடன சேவையுடன் கோவில் பிரகாரத்தை பெருமாள் எழுந்தருளி சுற்றி வந்ததை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ திருவிக்கிரம நாராயணபெருமாள் கோயில்:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட 108 திவ்யதேசங்களில் 28 வது ஸ்தலமான ஸ்ரீ திருவிக்கிரம நாராயணபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தாயாருடன் ரத்தின அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள திருமங்கையாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. அதனையடுத்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அவ்வழியே ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியை இன்று மட்டுமே வணங்க முடியும்.

தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள்:

மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் உபகோவிலான மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான திருமொழி திருவாய்மொழி பகல்பத்து இராபத்து உற்சவ விழா கடந்த 3ஆம் தேதி தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிரசன்ன பகல் பத்து உற்சவ விழாவை முன்னிட்டு அருள்மிகு ங்கடாசலபதி சாவ அலங்காரத்துடன் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தை தினமும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. இதனையொட்டி மங்கள வாத்தியங்கள் மற்றும் தீவட்டி முன் செல்ல அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் சகல பரிவாரங்களுடன் பரமபத வாசலில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து பெருமாள் கோவிலை வலம் வந்தும் பிறகு சயன் கோல அலங்காரம் கண்டருளியும் அருள்பாலித்தார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி காலை 7 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சேலம் கோட்டை அழகிரி நாத சுவாமி:

வைகுண்ட ஏகாதசியையொட்டி பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில் சொர்க்கவாசல் அதிகாலை 5:15 மணியளவில் திறக்கப்பட்டது. முன்னதாக கடந்த மூன்றாம் தேதி பகல் பத்து உற்சவத்தோடு தொடங்கிய விழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து வைகுண்ட ளகாதசியையொட்டி இரவு முழுவதும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ச்சியாக இன்று அதிகாலை முதல் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர் பல்லக்கில் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது கூடியிருந்த அனைவரும் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இன்று தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள்:

108 வைணவ தலங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமும் ஆன நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று காலை, உற்சவப்பெருமாள் தாயாருடன் முத்தங்கியில் எழுந்தருள, பரமபத வாசல் (எ) சொர்க்கவாசல் திறப்பு வைபவம் சிறப்பாக நடைப்பெற்றது. முத்தங்கி அலங்காரத்தில் உற்சவர் சீனிவாசப்பெருமாள் வஞ்சுளவள்ளி தாயாருடன் கடந்து வர, அவரை பின் தொடர்ந்து ஏராளமானோர் பரமபத வாயிலை கடந்து தரிசனம் செய்தனர்.

Related Posts

Leave a Comment