மூத்த கன்னட நடிகர் எஸ்.சிவராம் தன்னுடைய வீட்டில் கால் தவறி கீழே விழுந்த நிலையில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த கன்னட நடிகர் எஸ்.சிவராம் தன்னுடைய வீட்டில் கால் தவறி கீழே விழுந்த நிலையில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
84 வயதான, பழம்பெரும் நடிகர் எஸ்.சிவராம், செவ்வாய்கிழமை அன்று இரவு தன்னுடைய வீட்டில் இருந்த போது, எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில், சிவராம் மயக்க நிலையில் குடும்பத்தினரால் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, மூளையில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. மேலும் இவருடைய வயதை கருத்தில் கொண்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து ஐசியூ-வில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் சிவராம் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவராம் சபரிமலை கோவிலுக்கு செல்ல இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சிவராம். புட்டண்ணா கனகல் மற்றும் டாக்டர் ராஜ்குமார் ஆகியோரின் படங்களில் மறக்கமுடியாத பாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் விஷ்ணு வர்தனுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
குணச்சித்திர நடிகர் என்பதையும் தாண்டி நகைச்சுவையான பாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ‘நாகரஹாவு’ (1972), ‘நானொப்பா கல்லா’ (1979), ‘ஹோம்பிசிலு’ (1978), ‘கீதா’ (1981), ‘யெஜமானா’ (2000), மற்றும் ‘அபதமித்ரா’ (2004) ஆகிய கன்னட படங்கள் தற்போது வரை ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. சிவராம் தனது சகோதரர் எஸ் ராமநாதனுடன் இணைந்து ‘கெஜ்ஜே பூஜை’ (1970), ‘உபாசனே’ (1974) போன்ற புகழ்பெற்ற படங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர், மிகவும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி வரும் தகவல்கள் கன்னட திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் திரைபிரபலகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.