43 வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவின் (CIFF) சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்னும் விருது ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.
கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்ற ஏ.ஆர் ரகுமான் ஹாலிவுட் திரைப்படமான “ஸ்லம் டாக் மில்லியனியர்” என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதாய் வென்றார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் “பத்ம பூசண்” விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் “மொசார்ட்” என்றும் அழைக்கப்படுகிறார்.
அறிமுக இசையமைப்பாளராக இவர் பணியாற்றிய ஜென்டில் மேன், கிழக்கு சீமையிலே உள்ளிட்ட படங்களின் பாடல்கள் இன்றளவும் மனதில் நிற்பவையாக இருக்கின்றனர். கமல், ரஜினி என பிரபலங்கள் பலரின் படங்களில் இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் முத்து,சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 உட்பட பல ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தென் இந்திய மொழிகளில் கலக்கி வந்த ஏ.ஆர். ரகுமானின் புகழ் உலகளவில் பிரபலம். ஏ.ஆர்.ரகுமானின் இசை பயணத்தில் மேலுமொரு மணிமகுடமாக நேற்று நடைபெற்ற “43rd Cairo International Film Festival” -ல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5 வரை எகிப்தில் நடைபெற்று வரும் இந்த விழாவில் இசை சார்ந்த மேதைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது வென்ற இசை புயலுக்கு திரை துறையினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.