பிரபல நடன இயக்குனர் சிவசங்கர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய சினிமா உலகில் புகழ்பெற்ற நடன இயக்குனராக வலம் வந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் பலமொழி படங்களில் பணியாற்றி இருக்கிறார். தமிழில் தனுஷின் ‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற ‘மன்மதா ராசா’ பாடலில் இடம்பெற்ற நடனத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இதனையடுத்து, வரலாறு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, பரதேசி, தானா சேர்ந்த கூட்டம், பூவே உனக்காக உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் பலரின் திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். தமிழக அரசின் திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார். இந்நிலையில், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை அளிப்பதற்கு அதிகம் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க உதவி செய்யும்படி குடும்பத்தினர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.