டீனேஜ் பிள்ளைகள் போதைக்கும் ,தவறான பாதைக்கும் போகாமலிருக்க பெற்றோருக்கு டிப்ஸ்

by Lifestyle Editor
0 comment

குழந்தை பருவத்திற்கும், டீன் ஏஜ் பருவத்திற்கும் இடைப்பட்ட வயது கொண்ட குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கும். ‘ரெண்டுங்கெட்டான் வயது’ எனப்படும் இந்த பருவத்தில் அமைதியாகவே இருக்க மாட்டார்கள். ஏதாவது சேட்டை செய்து கொண்டிருப்பார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பார்கள். சில பெற்றோர் குழந்தைகளின் செயல்பாடுகளை சமாளிக்க முடியாமல் சட்டென்று கோபம் கொள்வார்கள். அது தவறானது. இந்த வயதில் குழந்தைகளிடம் இயல்பாக வெளிப்படும் சுபாவம் இது. அதனை கட்டுப்படுத்த முயற்சிப்பது அவர்களின் குணாதிசயத்தையும், ஆளுமை திறனையும் பாதிப்புக்குள்ளாகிவிடும். குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புகள், தவறுகள் அனைத்திற்கும் பெற்றோர் பதிலளிக்க வேண்டும். எது சரி, எது தவறு என்பதை விளக்கி புரியவைக்க வேண்டும்.

இன்றைய காலத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பிவிட்டு மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறோம். நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் பார்த்து நமக்குப் பயமாக இருக்கிறது. தற்போது உள்ள குழந்தைகளுக்கு நாம் சிறு வயதில் கற்றுக் கொண்ட விஷயங்களை விட அதிகமாகக் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. யார் மூலமாகவோ சில விஷயங்கள் தவறாகப் போதிக்கப்படுவதை விட, அதன் விளைவாக தவறான நடவடிக்கைகளுக்கு அவர்கள் சென்று தவறான முடிவுகள் எடுப்பதை விட, பெற்றோர்களே அவர்களுக்கு அவற்றை நாசூக்காகச் சொல்லிக் கொடுத்தால் நல்லது.

ஒரு மனிதனாக வளர்ந்து வருகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் வயதில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது உடன் பயிலும் நண்பர்களுடன் ஜாலியாகப் பார்ட்டியில் கலந்து கொள்வார்கள். பார்ட்டிகளில் கலந்து கொள்வதில் அவர்களுக்கு நிறைய விருப்பம் இருக்கும். அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு போதை மருந்துகள், மதுபானங்கள் மற்றும் இதர போதையேற்றும் பொருட்களை யாராவது அறிமுகப்படுத்தலாம். அவர்களது நண்பர்கள் பல்வேறு சமூகப் பின்னணியை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இதெல்லாம் மிகச் சாதாரணமான விஷயங்களாக இருக்கும். அத்தகைய நண்பர்களின் வற்புறுத்தலால் இவற்றை குழந்தைகள் உட்கொள்ள வாய்ப்புண்டு. எனவே குழந்தைகளுக்கு இவற்றைப் பற்றிச் சொல்லி சரியாக வளர்க்கவில்லையென்றால், அவர்கள் இதனை ஜாலிக்காகச் செய்கிறேன் என்று ஆரம்பித்து, பின்னர் அடிமையாகிவிடுவார்கள்.

தனது சகோதரன், சகோதரியுடன் சண்டை போடும் சுபாவம் இந்த பருவத்தில் அதிகரிக்கும். எதற்கெடுத்தாலும் சண்டை போடுவார்கள். அப்போது யாராவது ஒருவர் கடுமையாக திட்டிவிட்டால் சட்டென்று மனமுடைந்து போய்விடுவார்கள். அழவும் செய்வார்கள். தாங்கள் செய்யும் தவறுகள், முயலாமை, அச்சம் என குழந்தைகள் அழுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதற்காக ‘அழுமூஞ்சு. எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கிறாய்’ என்று கூறி திட்டக்கூடாது. அழுவது நல்ல பழக்கமல்ல என்று கூறி அதில் இருந்து மீண்டு வருவதற்கு பெற்றோர் தைரியமும், தன்னம்பிக்கையும் அளிக்க வேண்டும்.

நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவன், கையாலாகாதவன்’ என்பது போன்ற வார்த்தைகளை கூறுவதை தவிர்த்துவிட வேண்டும். அவை அவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்து விடும். ‘தாங்கள் எதற்குமே உதவாத நபர்’ என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். இந்த வயதில் குழந்தைகள் தவறுகள் செய்வது, தோல்வி அடைவது எல்லாம் சகஜம். அதில் இருந்து மீண்டு வருவதற்கு பெற்றோர்கள்தான் பக்கபலமாக இருக்க வேண்டும்.

இந்த பருவத்தில் குழந்தைகள் சுறுதுறுவென்று இருப்பார்கள். ‘அதை செய்யாதே. இதை செய்யாதே’ என்று கடிவாளம் போடக்கூடாது. எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தால் அதுதான் தவறானது. அது அவர்களின் தனித்திறனையும், ஆளுமைத்திறனையும் பாதித்துவிடும். அவர்கள் செய்யும் செயல்களில் இருக்கும் நல்லவை, கெட்டவைகளை விளக்கி புரியவைக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment