கோபத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது

by Lifestyle Editor
0 comment

‘கோபத்தோடு எழுபவன் நட்டத்தோடு உட்காருவான்’ என்று கூறுவார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மையான வாசகம்.

சினம் என்பது ஆசிட் போன்றதாகும். அதனை எதன் மீது உற்றினாலும் எரித்து அழித்து விடும். அதே சமயம் அதனை வைத்திருக்கும் பாத்திரத்தையும் அரித்து விடும். இதனால்தான் சினம் எனும் சேர்ந்தாரை கொல்லி என்று வள்ளுவ ஆசான் கூறுகிறார். கோபம் இல்லாத குடும்பத்தில்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களின் உள்ளமும் குளிர்ந்திருக்கும்.

சிலர் கோபத்தை தங்கள் அடையாளமாகவே வைத்திருப்பார்கள். ஏன் எதற்கெடுத்தாலும் இப்படி எரிந்து விழுகிறீர்கள்? என்று கேட்டால் இந்த காலத்தில் கோபப்பட்டால்தான் வீட்டிலும் நாட்டிலும் காரியம் நடக்கிறது என்பார்கள். ஒருசிலர் நான் எங்கே கோபப்படுகிறேன், என்னை கோபப்பட வைக்கிறார்கள் என்பார்கள்.

மேலதிகாரிகள் பலரும் இதுபோன்று தனக்கு கீழ் வேலை பார்ப்பவரிடம் கோபத்தை காட்டுவார்கள். அதன் மூலம் வேலையை எளிதாக முடித்து விடலாம் என்பது அவர்களின் நினைப்பு. ஆனால் அது உண்மையல்ல. பயந்து செய்யும் எந்த காரியமும் உருப்படாது. அதில் முழுமை இருக்காது. அன்பால் செய்யும் வேலையே திருப்திகரமாக இருக்கும்.

கோபப்படுவதால் பிறருடைய மனம் புண்படுவதுடன் நமது உடல்நிலையும் பாதிக்கப்படும். ரத்தக்கொதிப்பு உண்டாகும். கோபப்படும் போது லாஜிக்கலாக சிந்திக்கும் திறனுடைய நமது இடது பக்க மூளை செயலற்று போகிறது. அந்த சமயத்தில் உணர்ச்சிப்பூர்வமான வலதுபக்க மூளை முழு வேகத்துடன் செயல்பட்டு, உங்கள் கோபத்தை மேலும் தூண்டிவிட்டு தவறான முடிவுகளை எடுக்க செய்கிறது.

அதனால்தான் குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே சண்டை ஏற்படும் போது, மனைவி இனி ஒரு நொடியும் உங்களுடன் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு அம்மா வீட்டுக்கு செல்வதும், இனி என் முகத்தில் முழிக்காதே என்று கணவன் சொல்வதும் நடக்கிறது. இது சிந்தித்து எடுத்த முடிவல்ல. உணர்ச்சியில் எடுத்த தவறான முடிவு.

நாம் பெரும்பாலும் அமைதியான நிலையில் எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை. கோபப்படும் சமயத்தில்தான் அவசரப்பட்டு சிந்திக்காமல் முடிவுகளை எடுத்து அவதிப்படுகிறோம். அதனால் தான் கோபத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று சொல்வார்கள். எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படக் கூடியவர்களை, பிறர் எளிதாக தூண்டி விட்டு எது வேண்டுமானாலும் செய்யலாம். எனவே எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கோபப்பட்டால் குடும்பத்தில் மட்டுமல்ல சமுதயத்திலும் மதிப்பு கிடைக்காது. ஒரு வெற்றிகரமான தலைவருக்கு அடிப்படை தேவை பொது அறிவோ செல்வமோ இல்லையாம். சினம் கொள்ளாமல் இருப்பதே முக்கிய தகுதியாம். இது குறித்து உலக சுகாதார நிறுவனம் 24 வருடமாக ஒரு ஆய்வை நடத்தியது. இதில் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு பொது அறிவு என்று சொல்லப்படும் ஐ.கியூ. 20 சதவீதம் இருந்தாலே போதும்மாம். இ.கியூ. எனப் படும் வாழ்வியல் கல்விதான் 80 சதவீதம் தேவை என்று தெரிய வந்துள்ளது.

இந்த வாழ்வியல் கல்வியிலும் தன்னையும் பிறரையும் கையாலும் தன்மைதான் முக்கியமானது. அதிலும் கோபத்தை கட்டுப்படுத்துவதே பிரதானமாகும்.
அதனால் நாம் என்ன படித்திருந்தாலும் எந்த பெரிய பதவியில் இருந்தாலும் ஒரு லீடராக வரவேண்டும் என்றால் கோபத்தை கையாள தெரிந்திருக்க வேண்டும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தலைமை பதவிக்கு மட்டுமல்ல இல்லத்தில் இனிய வாழ்வுக்கும் கோபத்தை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இதை அறிந்திருந்தாலும் நம்மால் கோபத்தை தவிர்க்க முடியவில்லையே ஏன்? சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் சாத்தியமே. மற்றவர்கள் செய்யும் அல்லது செய்யாமல் விடும் சில விஷயங்கள் நம் கோபத்தை தூண்டி விடுகிறது.

உண்மையில் மற்றவர்கள் வேலைகளை சரியாக செய்யவில்லை என்பதைவிட “நான் சொல்வதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை… என் பேச்சை மதிக்கவில்லை…” என்றெல்லாம் நினைப்பதே கோபத்தை வரவழைக்கிறது. உங்கள் வழிமுறைகளை சரி என்று நீங்கள் நினைப்பது போல், தாங்கள் செயல்படும் விதமே சரியானது என்றுதான் மற்றவர்கள் நினைப்பார்கள் என்பதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள்.

கோபத்திற்கு இடம் தருவதற்கு முன் கொஞ்சம் நிதானித்து பிறருடைய உணர்வுகளையும் மதித்தால் உங்கள் கோபம் தானாகவே வெளியேறிவிடும். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள். ஒரே ஒரு பறவையை விரட்டுவதற்காக கல் எறிந்தால் போதும், அது சுற்றியிருக்கும் பறவைக்கூட்டத்தையே விரட்டி விடும். கோபமும் அப்படித்தான். ஒரு பிரச்சினைக்காக நிதானம் இன்றி கோபப்பட்டால் அதுவே வேறு பல பிரச்சினைகளை உருவாக்கி விடும்.

எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற பதட்டத்தின் போதோ அல்லது மற்றவர்களின் குறைகளை கண்டிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போதோ, மற்றவர் ஏதாவது சிறு தவறு செய்யும் போதோ கோபம் என்கிற பூதம் உங்களுக்கு உதவி செய்ய வருவது போல் வந்து உங்களை முழுமையாக ஆட்கொண்டு விடுகிறது. இது நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் நற்பெயர், உறவுகள், தன்மானம், புகழ், நிம்மதி என அனைத்தையும் தகர்த்தெறிந்து விடுகிறது.
சீட்டுகட்டு மாளிகையை சிறு காற்று சட்டென்று சரித்து விட்டு செல்வது போல் உங்களின் மொத்த மகிழ்ச்சியையும் கோபம் எனும் பூதம் தோன்றிய நொடியில் உடைத்து விடுகிறது.

கோபம் வருவது இயல்புதான்.ஆனால் அதற்கு நீங்கள் பணிந்து போவது அல்லது அதனை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்வது ஆகிய இரண்டுமே உங்கள் வசம்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடிக்காத ஒன்று நடக்கும் போது கோபத்தை சட்டென்று வெளிப்படுத்தாமல் கொஞ்சம் நிதானியுங்கள். சினத்தை வெளியே விட்டால் அது ஏற்படுத்தி விட்டு செல்லும் விளைவுகளை நினைத்து பாருங்கள். ஒரு முறை ஆழ்ந்த மூச்சுவிட்டு உங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

கோபம் வரும் சமயத்தில் சிறிது நேரம் இடது மூக்கினை ஒற்றை விரலால் மூடிக்கொண்டு வலது மூக்கின் வழியே சுவாசத்தை உள்ளித்து வெளியிட வேண்டும். இது மூளையின் உணர்ச்சிவசப்படும் பகுதியை மூடிவிட்டு சிந்திக்கும் பகுதியை செயல்பட வைக்கும். கோபப்படும் சமயத்தில் தண்ணீரை சப்பி சப்பி குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இதுபோல் செய்தால் பூதம் போல வரும் கோபம் சட்டென மறைந்து விடும். உங்கள் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஒரு சேதமும் இல்லாமல் நிலைத்திருக்கும்.

Related Posts

Leave a Comment