சுப காரியங்கள் புரட்டாசி மாதத்தில் செய்யலாமா?

by Lifestyle Editor
0 comment

இன்று புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி என்பது பெருமாளுக்கு, சக்தி வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் வீட்டில் சுப காரியங்களை நம் முன்னோர்கள் நடத்தியது இல்லை. அதே பழக்கம் இன்றும் தொடர்கிறது. புரட்டாசி சனிக் கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பது, மஹாளய அமாவசையை ஒட்டி முன்னோர் வழிபாடு நடத்துவது, நவராத்திரி விழாவையொட்டி சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவியர் வழிபாடு நடத்துவது என்று இந்த மாதம் முழுக்க பக்தி கமழும்.

புரட்டாசி மாதத்தில் பொதுவாக யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள். திருமணம் செய்ய ஏற்ற மாதங்களாக சித்திரை, வைகாசி, ஆவணி, அதை, பங்குனி ஆகிய மாதங்கள் மட்டுமே ஏற்றது என்று சொல்வார்கள். ஆடி மாதம் சுப காரியங்கள் செய்ய மாட்டார்கள், அதைப் போலவே புரட்டாசியிலும் மார்கழியிலும் செய்யக் கூடாது.

புரட்டாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் கூட செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதத்துக்கும் வாஸ்து நாள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களுக்கு மட்டும் வாஸ்து நாள் இருக்காது. எனவே, இந்த நான்கு மாதங்களில் புதுமனை புகுவிழா நடத்தக் கூடாது. வாடகை வீட்டில் குடித்தனம் புகுவதைக் கூட செய்யக் கூடாது என்று சொல்வார்கள்.

சீமந்தம் செய்வதில் தடையில்லை. ஆனால், கர்ப்பம் தரித்து ஒற்றைப்படை மாதமாக அமைந்தால் புரட்டாசியில் சீமந்தம் செய்யலாம். அதே போல் அறுபதாம் கல்யாணத்தை புரட்டாசி மாதத்தில் நடத்தலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.

புரட்டாசி வெள்ளிக்கிழமை வழிபாடு!

புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை திருவோணம் நட்சத்திரத்தில், ஏகாதசி என்று பிறக்கிறது. இது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள். இன்றைய நாள் மட்டுமின்றி, புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமிக்கு உரிய நாள்தான்.

இன்றைய நாளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பூஜை செய்வதன் மூலம் வாழ்வில் நிலவும் கஷ்டங்கள் நீங்கும். வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை நேரத்தில் மகாலட்சுமி படத்துக்கு தீபாராணை செய்து, தேன் கலந்த பாயசம் படைத்து வணங்க வேண்டும். பூஜையின் போது லட்சுமி ஸ்தோத்திரம் படிக்கலாம். பூஜை செய்யும் போது வீட்டின் கதவு திறந்திருக்க வேண்டும். அப்போதுதான் மகாலட்சுமி வீட்டுக்குள் வருவார்!

Related Posts

Leave a Comment